மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற 9 மாவட்ட மீனவர்கள் ஆலோசனைக் கூட்டம் நிறைவு.சுருக்கு வலைக்கு நிரந்தர தடை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம். மீனவர்களின் தொழில்மறியல் போராட்டம் வாபஸ்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவ கிராமம் அருகே கடலில் கடந்த 31ம்தேதி தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டி மீன்களை ஏற்றி வந்த சந்திரபாடி மீனவ கிராமத்தின் பைபர் படகை சிறைப்பிடித்து துறைமுகத்திற்கு கொண்டு வந்த பிரச்சனை தொடர்பாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்

இந்நிலையில் சுருக்குமடி வலையை முற்றிலும்’ தடை செய்ய கோரி மாவட்ட தலைமை கிராமமான தரங்கம்பாடி மீனவ கிராமம் தலைமையில் 21 மீனவ கிராமங்கள் தொடர் தொழில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நான்காவது நாளாக இன்று போராட்டம் தொடர்ந்த நிலையில் தரங்கம்பாடியில் சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுருக்குமடி வலையை முற்றிலும் தடை செய்ய வலியுறுத்துவது தொடர்பாக 9 மாவட்ட மீனவர்களின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

தரங்கம்பாடி தலைமை மீனவ கிராமம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்ட மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

கூட்டத்தின் முடிவில் சுருக்கு மடி, இரட்டைமடி வலை மற்றும் அதிவேக விசை படகை நிரந்தரமாக தடை செய்ய வலியுறுத்தி அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல், ராமநாதபுரத்தில் நடைபெறும் மாநாட்டில் கோரிக்கையை வலியுறுத்தி 9 மாவட்ட மீனவர்கள் சார்பாக முதல்வரிடம் நேரில் மனு அளிப்பது எனவும்,

மாவட்ட ஆட்சியரும் மீன்வளத்துறை அதிகாரிகளும் தடை செய்யப்பட்ட வலை மற்றும் அதிவேக படகுகளை நிரந்தரமாக தடை செய்ய நடவடிக்கை எடுக்காவிடில் ஒன்பது மாவட்ட மீனவர்களும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.

தொடர்ந்து நான்கு நாட்களாக நடைபெற்று வந்த தொழில் மறியல் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும் நாளை முதல் 21 மீனவ கிராமத்தினர் தொழிலுக்கு செல்வதாக தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *