ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

ஓ.என்.ஜி.சி சார்பில் திருவாரூர் புலிவலத்தில்
மாபெரும் பொது மற்றும் கண் மருத்துவ முகாம்
புதிய செயல் இயக்குநர் உதய் பாஸ்வான் முன்னிலையில்
மாவட்ட ஆட்சித்தலைவர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்

ஓ.என்.ஜி.சி காவேரி அசட்டின் அசட் மேலாளராக ஆகஸ்ட் 1 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்ட செயல் இயக்குநர் உதய் பாஸ்வான் முன்னிலையில் சமூக பொறுப்புணர்வு திட்ட நிதி உதவியுடன் திருவாரூர் ஒன்றியம் புலிவலம் ஊராட்சியில் மாபெரும் பொது மற்றும் கண் மருத்துவ முகாம் 08.08.2023 அன்று நடைபெற்றது.

மதுரை மீனாட்சி மிஷன் மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவனையைச் சேர்ந்த மருத்துவ குழு உதவியுடன் நடைபெற்ற முகாமினை, திருவாரூர் மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு, ஒன்றியப் பெருந்தலைவர் புலிவலம் தேவா ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.

ஓஎன்ஜிசியின் செயல் இயக்குநர் உதய் பாஸ்வான் ஆங்கிலத்தில் பேசுகையில் வெகுவிரைவில் தமிழைக் கற்றுக் கொண்டு தமிழ்மக்களுடன் தமிழில் நேரடியாக உரையாற்றுவேன் என்று உறுதி அளித்தார். ஓஎன்ஜிசியின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்ட நிதி சரியான வகையில் மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனைப் படி பயன்படுத்தப்படும் என்றும் பள்ளிகளுக்கான ஸ்மார்ட் வகுப்புத் தேவைகள் பூர்த்தி செய்ய ஆவன செய்யப்படும் என்றும் அறிவித்தார். ஓஎன்ஜிசி நிறுவனம், மத்திய மாநில அரசுகளின் சட்டதிட்டங்கள் மற்றும் விதிமுறைகளை எள்ளளவும் மீறாமல் தன் உற்பத்தி நடவடிக்கைகளைத் தொடரும் என்றும் உறுதி அளித்தார். பொதுமக்கள் திறந்த மனதுடன் ஓஎன்ஜிசியின் பணிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

378 பயனாளிகள் கலந்து கொண்ட முகாமில் மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு மற்றும் ஒன்றியப் பெருந்தலைவர் தேவா ஆகியோர் பேசும்போது ஓஎன்ஜிசி நிறுவனம் பெருமளவு சமுகப் பொறுப்புணர்வு திட்டங்களை திருவாரூர் பகுதியில் செய்து வருவது பாராட்டத்தக்கது என்றும் அந்த வகையில் இந்த முகாமும் சிறப்பாக நடைபெறுவதாகவும் குறிப்பிட்டனர்.

மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அவர்கள் உரையாற்றும் போது இத்தகைய முகாம்களைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு தமக்கு ஏதாவது குறைபாடுகள் இருக்கின்றதா என்று அறிந்து கொண்டு ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை பெற்று ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேல்சிகிச்சை தேவைப்படுவோர் அரசு மருத்துவமனைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். மிகக் குறைந்த கால இடைவெளியில் ஓஎன்ஜிசி நிறுவனம் நடத்தும் இரண்டாவது மருத்துவ முகாமில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் குறிப்பிட்டார். சோதனைகள் தரமான முறையில் நடைபெறுவதையும் பாராட்டினார்.

இந்த முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சோதிக்கப்பட்டன. தேவைப்படுவோருக்கு ஈ.சி.ஜி எடுக்கப்பட்டது. அனைவருக்கும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. கண்ணாடி தேவைப்படும் 192 பேருக்கு இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. பங்கேற்ற முப்பது முதியோர்களுக்கு கைத்தடிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, வட்டாட்சியர் நக்கீரன், வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி, மாவட்டஆட்சியரின் உதவியாளர் சரவணன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். புலிவலம் ஊராட்சி தலைவர் காளிமுத்து ஊராட்சி துணைத்தலைவர் மக்கள் கார்த்தி ஒன்றிய கவுன்சிலர் தவுலத்இக்பால், குழும பொதுமேலாளர் மாறன், முதன்மை பொது மேலாளர்கள் செல்வகுமார், கொளஞ்சிநாதன் ஓ.என்.ஜி.சி மருத்துவ அலுவலர் கனேஷ்குமார், பொது மேலாளர்கள் சரவணன், ஜோசப்ராஜ் துணைப் பொது மேலாளர்கள் பிரபாகர், ராஜசேகர், சுரேஷ்குமார், சமுக பொறுப்புணர்வுத் திட்ட அதிகாரிகள் விஜய்கண்ணன், சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை சமுக பொறுப்புணர்வுத் திட்ட அதிகாரி முருகானந்தம் ஒருங்கிணைத்தார்.

முகாமை கடலூரை சேர்ந்த முதியோருக்கான முதியோர் அமைப்பு இயக்குநர் இளங்கோ ராஜரத்தினம் ஏற்று நடத்தினார். ஒவ்வொரு பகுதியிலும் ஓஎன்ஜிசி இது போன்ற முகாம்களை மாதம்தோறும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *