கந்தர்வகோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நல குழுமம் மற்றும் கந்தர்வகோட்டை பாரத் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைக்கு எதிர்ப்பு விழிப்புணர்வு, ஹிரோஷிமா நாகசாகி நினைவு நாள், மந்திரமா? தந்திரமா? எனற அறிவியல் நிகழ்ச்சி என முப்பெரும் விழா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கந்தர்வகோட்டையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பாரத் ரோட்டரி சங்க தலைவர் தேவநாதன் தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி முன்னிலை வகித்தார். கந்தர்வகோட்டை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் விஜயலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
புதுக்கோட்டை குழந்தைகள் நல பாதுகாப்பு மற்றும் ஆற்றுநர் மணிகண்டன் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை எதிர்ப்பு விழிப்புணர்வு என்ற தலைப்பில் குழந்தைகளின் பாதுகாப்பு, குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள், பிரச்சனைகளிலிருந்து எவ்வாறு விடுபடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை வட்டாரத் தலைவர் ரகமதுல்லா ஹிரோஷிமா நாகசாகி நினைவு தினம் குறித்து கருத்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சதாசிவம் முப்பெரும் விழாவில் பேசியதாவது…
மாவட்டத்தில் 18 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் குழந்தைகள் தொடர்பான அனைத்து சட்டங்களையும் செயல்படுத்துதல் மற்றும் தகுதியான குழந்தைகளுக்கு அரசு திட்டங்களை பெற்றுத் தருதல் என சமூக பாதுகாப்பு துறை மூலம் குழந்தைகளின் தாய் அல்லது தந்தை இழந்த ஆறு வயதிற்கு மேற்பட்ட 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை பேணி காத்து பாதுகாத்து வளர்க்க வளர்ப்பு நிதியாக மாதந்தோறும் தமிழ்நாடு அரசு நான்காயிரம் ரூபாய் வழங்கி வருகிறது என்றும், இத்திட்டத்தில் பயன்பெற 18 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு செயல்படுத்தி வருகிறது .
பிற்காப்பு திட்டத்தின் மூலம் 18 வயதிற்கு மேற்பட்ட 21 வயது வரை உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி பயில்வதற்கும் சமூகத்தோடு ஒன்றி வாழ்வதற்கும் மாதம்தோறும் 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் குழந்தைகளுக்கு எதிரான பிரச்சனைகள் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய தொலைபேசி எண்கள் 1098 ,காவல் உதவி எண் 100 ஆகியவற்றில் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தொலைபேசி வழியாக தெரிவிக்கலாம் என்றும், அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்த விதமாக மந்திரமா? தந்திரமா? என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை செய்து காட்டினார் நிகழ்ச்சி மூலம் மாணவர்கள் உற்சாகமடைந்ததோடு அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளக் கூடிய வாய்ப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்வினை கந்தர்வகோட்டை பாரத் ரோட்டரி சங்க முன்னாள் மாவட்ட தலைவர் கணேசன் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்விற்கான ஒருங்கிணைப்பு பணியை அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பாக்கியராஜ் செய்திருந்தார். நிறைவாக பாரத் ரோட்டரி சங்க செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.