பெண்கள் உரிமை தொகை, காவிரி நதி நீர், என்.எல்.சி நிர்வாக பிரச்சினை உள்ளிட்ட விசயங்களை வலியுறுத்தி தேமுதிக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். இதில் கோவை காந்திபுரம் பகுதி கழகப் பொறுப்பாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மேலும் இதில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் சந்துரு தெற்கு மாவட்ட செயலாளர் ஜெகன் வடக்கு மாவட்ட செயலாளர் சண்முகவடிவேல் மாநில தொழிற்சங்க பேரவை துணை சட்ட ஆலோசகர் முருகராஜ் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நதிநீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் என்எல்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் கண்டிக்கப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் இளங்கோவன், திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்த ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாமல் மக்களை வஞ்சிக்கும் காரணத்தினால், அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பது வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி வருடா வருடம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். மேலும் என்எல்சி நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் அதிகமான நபர்களுக்கு இன்னும் அரசு வேலை வழங்கப்படவில்லை

மேலும் அரசு நிர்ணயித்த நிலங்களுக்கான தொகையும் முழுமையாக தரப்படவில்லை. மேலும் என்எல்சி நிர்வாகத்தால் கையகப்படுத்தப்பட்டு பயன்படுத்தபடாமல் உள்ள நிலங்களில் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் கர்நாடகத்தில் மேகதாதுவில் அணை கட்ட மாட்டோம் என்று கூறினால் மட்டுமே திமுக அரசு கூட்டணி வைக்க தயாரா? எனவும் கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *