சிவகங்கை:
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரி பவள விழாவில் உயர்கல்வி வளர்ச்சி யார் காலத்தில் இருந்தது என்பது தொடர்பாக அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்நாதன், தி.மு.க., அமைச்சர் பெரியகருப்பன் இடையே எழுந்த கருத்து மோதலால் விழா மேடை அரசியல் மோதல் மேடையானது.
விழாவில் செந்தில்நாதன் பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் தான் இங்கிருந்து அதிகளவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்று சென்றனர்.
தற்போது இங்கிருந்து இத்தேர்வில் தேர்ச்சி பெற்று செல்வோர் சதவீதம் குறைந்து விட்டது.
அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் உயர்கல்வி பெறுவோர் சதவீதம் 52 ஆக உயர்ந்திருந்தது. பிரதமர் மோடி மட்டுமே தமிழ் மற்றும் தமிழர்களின் பெருமையை உலகிற்கே எடுத்து சென்று கொண்டிருக்கிறார், என்றார்.
அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது: இன்று தமிழகம் கல்வி வளர்ச்சி பெற்ற மாநிலமாக உள்ளது. கல்வி மூலமே ஒரு நாடு அமைதி, வளர்ச்சி பெற்ற நாடாக மாறும். அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்நாதன் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வில் தமிழக பட்டதாரிகள் குறைவு என பேசினார்.
கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை விளங்க செய்யும் நோக்கில் தான் முதல்வர் ஸ்டாலின், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுக்கு தயாராகி வரும் 1,000 பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.7,500 வீதம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை துவக்கியுள்ளார்.
ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை சிறந்த மாநிலமாக உருவாக வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார், என்றார்.அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பேச்சுக்கு தி.மு.க., அமைச்சர் பதிலடி தருவதாக பேசியதையடுத்து அரசு விழா மேடை அரசியல் விவாத மேடையானது. எதுவும் புரியாமல் அங்கிருந்த மாணக்கர்கள் விழித்தனர், தேர்தல் நெருங்கி வரும் காலங்களில் இதெல்லாம் சகஜமப்பா என்கின்றனர் அரசியல் முக்கிய வட்டாரங்கள்!!