பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்டசோழபுரம் அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோவிலில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாமன்னன் இராஜேந்திரசோழன் பிறந்த நாள் ஆடித் திருவாதிரை விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கசொக கண்ணன், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சித்தலைவர்
இத்திருக்கோவில் உலக புராதான சின்னமாகவும், பராம்பரிய சின்னமாகவும், தொன்மையான கட்டடக் கலையின் உன்னத அடையாளமாக விளங்கி வருவது நமக்கெல்லாம் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் அமைந்துள்ளது. வங்காள தேசத்தை சோழ நாட்டுடன் இணைத்த வெற்றியின் மேன்மையாக கங்கைகொண்ட சோழபுரம் எனும் புதிய தலைநகரை உருவாக்கி ஆட்சியை நிர்வகித்த பேரரசர் இராஜேந்திர சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக தமிழக முதல்வரின் உத்தரவின்படி கொண்டாடப்படுகிறது. கங்கைகொண்ட சோழன், முடிகொண்ட சோழன், பண்டித சோழன் என பல்வேறு பெயர்களால் மக்களால் அழைக்கப படுகின்ற மாமன்னன் இராஜேந்திர சோழன் உதித்த நாளை நாடே போற்றும் வண்ணம் ஆடித் திருவாதிரை விழாவாக கடந்த ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாட அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வருக்கு அரியலூர் மாவட்டத்தின் சார்பிலும், பொதுமக்களின் சார்பிலும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இராஜராஜ சோழன் காலத்திலேயே இளைய அரசராக பொறுப்பேற்று பல்வேறு போர்களில் ஈடுபட்டு வெற்றிகளைப் பெறுவதற்கு அடிப்படையாக அமைந்தது அவருடைய இராணுவ கட்டமைப்பாகும். அதற்கு சான்றாக அமைந்தது தான் இந்த கங்கைகொண்ட சோழபுரம். மேலும் கடற்படை வைத்திருந்த ஒரே மாமன்னன் இராஜேந்திர சோழன் ஆவார். கடலின் நீரோட்டப் பாதைகளை நன்கு அறிந்த மதிநுட்பம் உடையவர் மாமன்னன் இராஜேந்திர சோழன் என வரலாறு குறிப்பிடுகிறது. அதனால் தான் கடல் கடந்து பல நாடுகளை வென்று சோழ எல்லைகளை விரிவுபடுத்தினார். இது நமது மண்ணிற்கும், தமிழ் நாட்டிற்கும் பெருமையாக கருதப்படுகிறது.
அவர் இந்திய நாட்டினை கடந்து அயல்நாடுகளுக்கு சென்று இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட பல்வேறு நாடுகளை வென்று அங்கு தன்னுடைய சாம்ராஜ்யத்தை பொற்காலமாக நிறுவியவர் ஆவார். அவரது ஆட்சிக்காலத்தில் பெண்கள் சமூக வேலைகளில் முழுமையாக ஈடுபட அனுமதிக்கப்பட்டனர். அந்தக் காலத்திலேயே பெண்களை சமமாக கருதும் உயரிய சிந்தனை கொண்டவர் என வரலாறு கூறுகின்றது.

மாண்புமிகு தமிழக முதல்வர் இக்கோயிலை சிறப்பிக்கும் வகையில் இங்கு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்ததன்படி அருங்காட்சியகத்திற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றுள்ளது. மேலும் அகழாய்வு பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அகழாய்வுகளில் பலவிதமான பண்டைய நாகரீகங்களின் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு அவை காட்சிப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இது நம்முடைய அரியலூர் மாவட்டத்தில் இருப்பது நமக்கு பெருமையாகும். எனவே, மாமன்னன் இராஜேந்திர சோழன் அவர்களின் சிறப்புகள் குறித்தும், வரலாற்றுப் பெருமைகள் குறித்தும் இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும் எனவும் பேசினார்.

தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலைஞர்களின் தப்பாட்டம், பரத நாட்டியம், கிராமிய நடனம், கட்டைக்கால் ஆட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், காவடி ஆட்டம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை பார்வையிட்டு கலைநி கழ்ச்சிகளில் கலந்துகொண்ட பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) பாலமுரளி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, கங்கைகொண்ட சோழபுரம் ஊராட்சிமன்றத் தலைவர் சரஸ்வதி, உட்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தவள்ளி குமார் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *