நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 5 அடி அதிகரித்து 54 அடியாக உயர்ந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி மேலும் 2 அடி அதிகரித்து 56.25 அடியானது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 69.75 அடியாக உள்ளது. இந்த அணைகளில் நேற்று மழை குறைந்ததால் அணைக்கு வரும் நீரின் அளவு 3 ஆயிரம் கனஅடியில் இருந்து 941 கனஅடியாக குறைந்தது. அணைகளில் இருந்து 354 கனஅடி நீர் வினாடிக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 43.60 அடியாக உள்ளது.