பகுத்தறிவுப் பகலவன் பெரியார் – கவிஞர் இரா.இரவி

பெரியார் தமிழகத்தில் பிறக்கவில்லை என்றால்
பாரினில் தமிழன் சிறக்கவில்லை என்று பொருள்

சமூக நீதியை நிலைநாட்டிய நாயகர்
சமுத்துவ சமுதாயத்தை உருவாக்கியவர் பெரியார்

இட ஒதுக்கீட்டிற்காக முதன் முதலாக அன்றே
இந்திய அரசியல் சட்டம் திருத்திட வைத்தவர் பெரியார்

காந்தியடிகள் கதர் உடுத்த வேண்டியதும்
கதராடை சுமந்து விற்றவர் பெரியார்

கள் மது ஒழிக்க வேண்டும் என்றதும் சொந்தக்
கள் மரங்களை வெட்டி வீழ்த்தியவர் பெரியார்

விதி என்றும் ஒன்றும் கிடையாது சொந்த
மதியை பயன்படுத்தி வென்றிடச் சொன்னவர் பெரியார்

கடவுள் என்பது கற்பிக்கப்பட்ட கற்பனை
கடைக்கொடி மனிதனுக்கு புரியும்படி உரைத்தவர் பெரியார்

பெண் ஏன்? அடிமையானாள் நூலின் மூலம்
பெண்ணின் அடிமை விலக்கை அடித்து நொருக்கியவர் பெரியார்

பிள்ளை பெறும் இயந்திரமா? பெண்கள்
பல கேள்விகளைக் கேட்ட அறிவுச்சுடர் பெரியார்

விதவைகள் மறுமணத்திக்குப் பல்லாண்டுகளுக்கு முன்பே
வித்திட்ட புரட்சி வேங்கை பெரியார்

எதையும் என்? எதற்கு? எப்படி? என
எல்லோரையும் கேட்ட வைத்த அறிஞர் பெரியார்

பக்தி என்பது தனிச்சொத்து ஒழுக்கம் பொதுச்சொத்து
பாமரனுக்கும் புரியும் வண்ணம் உணர்த்தியவர் பெரியார்

போராட்டம் அறிவித்தால் குடும்பத்துடன் வந்து
போராடும் முதல் ஆள் தந்தை பெரியார்

தண்டனைக்குப் பயந்து செய்த செயலை
தீர்ப்பு தருவோரிடம் மறுக்காத சிங்கம் பெரியார்

ஆதிக்கம் எந்தப் பெயரில் வந்தாலும் எதிர்த்தவர்
ஆதிக்கவாதிகளின் சிம்மசொப்பனம் பெரியார்

அமைதிப் பூங்காவாக இன்றும் தமிழகம் திகழ்ந்திட
அறிவு விதையை உள்ளங்களில் விதைத்தவர் பெரியார்

பெரியாருக்கு இணை இவ்வுலகில் பெரியார்
பெரியார் அவர்தான் என்றும் பெரியார்

நான் நேசிக்கும் நல்ல தலைவர் பெரியார்
நான் கவிஞன் ஆகக் காரணமானவர் பெரியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *