வெளிச்ச விதைகள் !

நூல் மதிப்புரை : கவிஞர் கே.ஜி. ராஜேந்திரபாபு 94440 40490.

பெங்களூருத் தமிழ்ச் சங்கத்தின் கவியரங்கப் பொறுப்பாளர் !
வெளியீடு ;வானதி பதிப்பகம் !

190 பக்கம் . விலை ரூபாய் 120.

  1. தினதயாளு தெரு
    தியாகராயர் நகர்
    சென்னை 600 017.
    பேச 044- 24342810 / 24310769
    மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com ****************** புளித்த கருத்துக்களையே புரட்டி புரட்டி எழுதாமல், வெளிச்ச விதைகளைத் தூவியிருக்கிறார் மதுரைக் கவிஞர்- மதுர கவிஞர் இரா.இரவி.
    இரா.இரவியின் பதினாறாவது நூல் “வெளிச்ச விதைகள்.”ஹைகூ திலகமான இரா.இரவி ஆசிரியப்பா பாணியில் எழுதிய நூல் வெளிச்சவிதைகள்.
    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல் இந்த நூலின் அகச்சிறப்பு முனைவர் இரா.மோகனின் முகம்போன்ற முன்னுரையில் தெரிகிறது.
    அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது”
    என்கிறார் திருவள்ளுவர்.
    அன்பு செலுத்தி ஆனந்தமாய் வாழ்ந்தால்
    ஆயுள் இருவருக்கும் நீளும்
    என்பது உண்மை என்கிறார் இரா.இரவி.
    அன்பு செலுத்தினால் ஆனந்தம் பெருகும். ஆனந்தம் பெருகினால் ஆயுள் நீளும்: என்கிறார் இரா இரவி.
    வீட்டறைக்குள்ளே சொர்க்கம் இருக்கிறது. ஆனால் அன்பெனும் சாவியைத் தொலைத்து விட்டு வெளியே வெப்பத்தில் நின்று கொண்டிருப்பவர்கள் இரவியின் கவிதையைப் படித்தால் அன்பின் வலிமையை உணர்வர்.
    “நிழலின் அருமை வெயிலில் தெரியும்
    நின் பெற்றோர் அருமை இழந்தால் புரியும்
    மதிக்க வேண்டிய காலத்தில் மதிக்காது
    மரித்த பின்னே மதித்து என்ன பயன்?”
    இருக்கும்போதே பெற்றோரை மதிக்கவேண்டும். மதிப்பது
    மட்டுமா ? போற்றவேண்டும். என்கிறார் இரா.இரவி.
    “பள்ளியின் வாசலில் பாட்டி அன்பாய் விற்கும்
    பழங்கள் சோளக்கதிர் வாங்கி உண்போம்”
    என்று பள்ளிக்கூட வாசலில் அமர்ந்திருந்த பாட்டியை மறக்காமல் எழுதியுள்ளார்.
    தமிழனின் பெருமையைச் சொல்ல வந்த இரா.இரவி,
    ‘கடல் கடந்து போரிட்டு வென்றவன் தமிழன்
    கல்லணையைக் கட்டிய கரிகாலன் தமிழன்’
    என்று பழம்பெருமை மட்டும் பாடாது
    “பொக்கரானில் அணுகுண்டு வெடித்தவன் தமிழன்
    சந்திரனுக்கு சந்திராயன் அனுப்பியவன் தமிழன்
    சிம்பொனி இசைத்து பிரமிக்க வைத்தவன் தமிழன்
    ஆசுகார் விருது இரண்டை வென்றவன் தமிழன்”
    என்று இன்றைய சாதனைத் தமிழர்களையும் மகிழ்வுடன் குறிப்பிடு-கிறார்.
    ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக இணையத்தில் இனிய ஆதிக்கம் செலுத்தும் மொழி நம் தமிழ்மொழி என்று பெருமிதம் கொள்கின்ற இரா.இரவி,
    என்னவளம் இல்லை நம் தமிழ்மொழியில்
    ஏன் கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்?
    என்ற வினாவை எழுப்புகின்றார். நியாயமான வினா தானே?
    “சந்திரன் என்று ஆண்பாலுக்கு உன் பெயர்
    நிலா என்று பெண்பாலுக்கும் உன் பெயர்
    ஆண்பெண் இருபாலருக்கும் பிடிக்கும்
    அதனால்தான் உன்பெயர் இருபாலருக்கும்”
    இரா.இரவியின் கற்பனை நயம் பௌர்ணமி நிலாபோல் பிரகாசிக்கிறது .
    தங்கமகன் தங்கவேலு மாரியப்பன் வாழ்க என்ற தலைப்பில்,
    மாற்றுத் திறனாளிகள் சமுதாயத்திற்கே
    மகுடம் சூட்டிவிட்டான் தங்கவேலு மாரியப்பன்
    ஒலம்பிக்கில் தங்கம் கிடைக்காத கவலையை
    பாராலிம்பிக்கில் தங்கம் வென்று நீக்கினான் ——-என்றும்
    வெள்ளிப்பதக்கம் பெற்ற தங்க மங்கை சிந்து வாழ்க என்ற தலைப்பில்,
    விளையாட்டை விளையாட்டாய் எண்ணாமல் போராடி
    வெள்ளிப் பதக்கம் பெற்ற தங்க மங்கை சிந்து வாழ்க !- என்றும்,
    மானம் காத்த மங்கை சாக்சி மாலிக் வாழ்க என்ற கவிதையில்
    மல்யுத்தம் செய்து எதிரியை வீழ்த்தி
    மானம் காத்து பதக்கம் பெற்றாள் ஹரியானாவில் பிறந்த பெண் இனத்தின் பிரதிநிதி
    கடுமையாகப் போராடி வெண்கலப் பதக்கம் வென்றாள்—–என்றும்
    நிகழ்கால சாதனையாளர்களைக் கவிதையாக்கி – கவிதையைச் சரித்திரம் ஆக்கியுள்ளார் இரா. இரவி.
    “சுற்றுலாத் துறையில் பணியாற்றும் இரா.இரவி, ‘உலகச் சுற்றுலா தினம்’ என்ற தலைப்பில் எழுதிய கவிதை சிறப்பாய் உள்ளது.
    யாரைத்தான் நம்புவதோ” சர்க்கரை நோய் குறித்து சிந்திக்க வைக்கும் கவிதை.
    “தெற்கே சூலம் வடக்கே சூலம் வேண்டாம் நமக்கு
    எத்திசையும் நல்லத் திசையே பயணிப்போம்”
    என்று பகுத்தறிவுக் கொள்கையைப் பாடுகிறார்.
    ஆயிரத்து ஐநூறுக்குமேல் பாடல்கள் எழுதி
    அளப்பரிய உயரம் சிகரம் தொட்டு மகிழ்ந்தான்” —
    என்று கவிஞர் முத்துக்குமார் சிறப்பைப் பாடுகிறார்.
    “குடையின்றி நின்றபோது நான்
    கொடுமை மழை என்று சபித்தேன்
    குடையோடு அவளுடன் செல்கையில்
    அருமை மழை என்று பாராட்டினேன்” —–
    ரசனையான கவிதை.
    தொடர்ந்து எழுதுங்கள் இரவி. நீங்கள் உங்கள் கவிதை தோகை விரிக்கும் போது பொழிகிறது எழில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *