கவியமுதம்’
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை : நீதியரசி எஸ். விமலா
கவிதையின் தாக்கமும், நோக்கமும்
மலர்களும் தேனைப் பெய்யும்
மதுகரம் ஈர்த்தே உய்யும்
அலர்கின்ற தாமரை தான்
அணி பெறும் மாலையாகும்
புலர்கின்ற பொழுதில் தோன்றும்
புதுப்புது வண்ணம் கண்டு
மலர்கின்ற சொற்கள் தாமே
மனங்கவர் கவிதையாகும்
பாருங்கள்! கவிஞர் இரா. இரவியின் கவியமுதம் பருகியதால் என் மதிப்புரையும் கூட கவிதை வரிகளால் தொடக்கம் பெறும் அளவு. அந்தக் கவிதைகள் அற்புத கவிதானுபவத்தை பெற்றிலங்குகின்றன.
ஆங்கிலக் கவிதை உலகில் எஸ்.டி. காலரிட்ஜ் போன்றவர்கள் யாத்தளித்த ஒப்பற்ற புனைவையும், புனைவின் அரிதாரப் பூச்சின் அடியில் ஒப்பனையை ஓரம் கட்டும் உண்மைக் கீற்றுகளையும், ஊடும் பரவுமாறு ஒருங்கே பிணைத்து வார்த்தை நெசவு செய்திருக்கிறார் கவிஞர்.
ஆற்றின் சலசலப்பாகவும், காற்றின் சுறுசுறுப்பாகவும் மட்டும் இருந்து விடுவதல்ல கவிதையின் வீரயம். அது காலங்களை மாற்றவும், காரியங்களை ஆற்றவும் செய்தால் தான் கவிதையின் தாக்கம் நோக்கத்தை எட்டியது எனப் பொருள்.
கவிஞரின் கவியமுதம், தமிழ் இலக்கியக் காதலர்களின் புத்தக அலமாரிகளில் நிரந்தரமான ஓர் இடம் பிடிக்கும் நிச்சயமான வாய்ப்பை பெற எனது வாழ்த்துக்கள்.
நீதியரசி ச. விமலா