**

தைமகளே வருக! தமிழ்ப்பற்றைத் தருக!
தமிழருக்கு மட்டும் தமிழ்ப்பற்றே இல்லை!

மலையாளிகள் மலையாளத்தில் பேசுகின்றனர்
மலைவாழ் மக்கள் நல்லதமிழ் பேசுகின்றனர் !

கன்னடத்தவர் கன்னடத்தில் பேசுகின்றனர்
கண்டபடி தமிங்கிலம் பேசுகின்றனர் தமிழர் !

பத்து சொற்களில் எட்டு ஆங்கிலம் கலந்து
பைந்தமிழைச் சிதைப்பது சரியா? சிந்திப்பீர்!

‘பண்ணி’ ‘பண்ணி’ என்று ‘பண்ணி’த்தமிழ் பேசுகின்றனர்
பார் போற்றும் தமிழை நாளும் சிதைக்கின்றனர்!

தமிழ்மொழி சிதைந்தால் தமிழினம் சிதையும்
தமிழர்களே சிந்தித்து செயலினை மாற்றுங்கள்!

நல்லதமிழ் நாளும் பேசிட முயலுங்கள்
நாடு பாராட்டும் தமிழை அழிப்பதை நிறுத்துங்கள்!

ஆங்கிலேயர் தமிழ் கலந்து பேசுவார்களா?
ஆங்கிலம் தமிழில் கலப்பது முறையா ?

இருமொழி கையெழுத்திற்கு முடிவு கட்டுங்கள்
இனி தமிழில் மட்டுமே கையொப்பம் இடுங்கள் !

தமிழரோடு தமிழில் மட்டுமே பேசுங்கள்
தமிழரிடம் ஆங்கிலத்தில் பேசுவதை நிறுத்துங்கள் !

தமிழர்களின் முகவரி தமிழ் உணருங்கள்
தமிழ்ப்பற்றுடன் தமிழர்கள் செயல்படுங்கள்!

எல்லா வளங்களும் உள்ள மொழி தமிழ்
எதற்கு கடன் வாங்க வேண்டும் பிறமொழியில் !

இல்லாதவன் பிச்சை எடுக்கக் காரணம் வறுமை
இருப்பவன் பிச்சை எடுப்பது என்றும் சிறுமை !

உலகின் முதல்மொழியை உருக்குலைய விடலாமா?
ஒப்பற்ற தமிழை உயரத்தில் மிக மிக வைப்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *