சீர்காழி பகுதியில் அறுவடை செய்த நெல்மூட்டைகளுடன் கடந்த 15நாட்களாக விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் விவசாயிகள் சோகம் தொடர்கதையாகஉள்ளது.

சீர்காழி,கொள்ளிடம் வட்டாரத்திற்கு உட்பட்ட வைத்தீஸ்வரன்கோயில்,திருவெண்காடு,எடகுடிவடபாதி,திட்டை,செம்மங்குடி,கடவாசல்,ஆர்ப்பாக்கம்,அத்தியூர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் மேட்டூர் பாசன தண்ணீர் கடைமடைக்கு திறந்துவிடாத நிலையில் பம்புசெட்,மழைநீரை நம்பி சாகுபடி செய்திருந்தனர். கடந்த சில வாரத்திற்கு முன்பு பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து பாதிப்பு ஏற்பட்டது.

நெல்வயலில் தேங்கிய மழைநீர் வடியாமல் மோட்டார் வைத்து அதனை இரைக்கும் பணியையும் கூடுதல் செலவு செய்து விவசாயிகள் மேற்கொண்டனர். இதனிடையே கனமழையால் பாதிக்கப்பட்டது போக எஞ்சிய சம்பா நெற் பயிர்களை கடந்த 15தினங்களுக்கு மேலாக சீர்காழி,கொள்ளிடம் வட்டாரத்தில் விவசாயிகள் அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுவருகின்றனர்.அறுவடை செய்யப்பட்ட நெல்மூட்டைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்று அடுக்கிவைத்து விவசாயிகள் இரவு,பகலாக காத்திருந்து நெல்மூட்டைகளை பாதுகாத்துவருகின்றனர். இதுவரை நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாத நிலையில் விவசாயிகள் நெல் மூட்டைகளை பனி,வெயில் ஆகியவற்றால் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறு விவசாயிகள் பொருளாதார நெருக்கடியால் கடனுக்கு நெல்லை வியாபாரிகளிடம் விற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.சில விவசாயிகளிடம் போதிய அளவு தார்பாய்,சாக்குபைகள்,படுதா இல்லாததால் அறுவடை செய்யும் பணியை தள்ளி வைத்துள்ளது.மேலும் சில விவசாயிகள் அறுவடை செய்த நெல்மணிகளை வீட்டில் கொட்டிவைத்துள்ளனர். இதனால் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்து நெல்மூட்டைகளை கொள்முதல் செய்திடவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *