கும்பகோணம் மாநகராட்சி சாலையில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் போதிய கவனிப்பு இல்லாமல் நடைபெற்று வரும் சாலை பணிகளால் சாலைகளில் ஆங்காங்கே திடீர் திடீர் பள்ளம் விழுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கும்பகோணம் மீன் மார்க்கெட் பகுதி அருகே இன்று காலை திடீரென தார் சாலைகள் உள் வாங்கியதால் சுமார் 5 அடி பள்ளம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து திடீரென பயங்கர சத்தத்துடன் சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. பள்ளம் ஏற்பட்ட இடத்தில் இருந்து சாலையில் ஆங்காங்கே சில அடிதூரத்துக்கு வெடிப்பு ஏற்பட்டது. பூகம்பம் வந்ததைபோல் திடீரென ஏற்பட்ட பள்ளத்தை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பாதாள சாக்கடை மெயின் குழாய் செல்லும் திறப்பானில் இருந்து சாக்கடை நீர் சாலையில் ஏற்பட்ட பள்ளம் வழியாக வெளியே வந்து தெருவில் ஓடியது.மேலும் சில அடி தூரத்தில் பள்ளம் தண்ணீராக காட்சி அளித்தது.

இது பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் பொக்லின் இயந்திரங்கள்,
இரும்பு தடுப்புகளை வைத்து அந்த வழியாக கார் மற்றும் கனரக வாகனங்கள் செல்லாமல் தடுத்து நிறுத்தினர். இருசக்கர வாகனங்கள் மட்டும் சாலையின் ஒரு ஓரமாக அனுமதிக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

கும்பகோணம் மாநகராட்சியை மேம்படுத்துவதற்காக பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கும்பகோணம் நகரம் முழுவதும் தார் சாலைகள் அமைக்கும் பணியும், சாலைகள் சீரமைக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆனால் இப்பணிகள் முழுமையாக நடைபெறாமல் ஆங்காங்கே சாலைகள் நடுவே குழிகளை தோண்டியும்,ஜல்லிக் கற்களை அப்படியே சில தினங்கள் விட்டு விடுவதால் பல நேரங்களில் விபத்துகளும், உயிர்பலிகளும் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே கும்பகோணம் மாநகராட்சி உடனடியாக இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து தரமாகவும் பாதுகாப்பாகவும் சாலைகள் சீரமைக்கும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *