கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்திய 6 பேர் கைது – தனிப்படை பிரிவு போலீசார் நடவடிக்கையினால் கைது செய்யப்பட்ட கும்பல் ரேஷன் அரிசி கடத்த பயன்படுத்திய வாகனம் -3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

வாகனத்தின் சாவி தொலைந்து விட்டது – புகைப்படம் எடுக்க முடியாது என்று கதை விட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு அதிகாரிகள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தும் கும்பல்கள் அதிகளவில் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த கும்பலுக்கு இடையில் நடக்கும் மோதல் காரணமாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்களை தடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவில்பட்டி சண்முகா திரையரங்கு பின்புறம் சுப்பிரமணியபுரம் 4வது தெருவில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தனி பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து தனிபிரிவு காவல் துறை உதவி ஆய்வாளர் ஸ்டிபன்ராஜ், தனிபிரிவு தலைமைக் காவலர் முத்துமாரி, தனிப்பிரிவு காவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் கொண்ட குழுவினர் தீவிர காண்கணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சுப்பிரமணியபுரம் 4வது தெருவில் ஒரு கும்பல் ஒரு வாகனத்தில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு இருப்பதை பார்த்தனர். போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் தப்பியோட முயன்றனர். இருந்த போதிலும் போலீசார் சுற்றி வளைத்து 6 பேரை பிடித்தனர். ஒருவர் மட்டும் தப்பியோடி விட்டார்.

பிடிபட்ட வாகனத்தினை சோதனை செய்த போது அதில் 23 மூட்டைகளில் 1150கிலோ ரேஷன் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட கோவில்பட்டி ஊரணி தெருவினை சேர்ந்த சிவராம் குமார், தங்கச்சரவணன், அஜய், திருப்பதி, பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரசாந்த், செக்கடி தெருவினை சேர்ந்த மாரிராஜா ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

மேலும் ரேஷன் அரிசி கடத்த பயன்படுத்திய வாகனம், 3 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து, தூத்துக்குடி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையிடம் ஒப்படைத்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் செய்தியாளர்கள் புகைப்படம் எடுக்க சென்ற போது, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் ரேஷன் அரிசி கடத்தி செல்ல பயன்படுத்தி வாகனத்தின் சாவி தொலைந்து விட்டது என்று கதை கூறினார்.

தனிபிரிவு போலீசார் சாவியை அவர்களிடம் ஒப்படைத்து இருந்த போதும், சாவி தொலைந்து விட்டதாக கூறியது செய்தியாளர் களை மட்டுமல்ல காவல்துறையினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *