திண்டுக்கல்லில் “நான் முதல்வன்“ திட்டத்தின் கீழ், உயர் கல்விக்கு வழிகாட்டும்
“கல்லூரிக் கனவு” நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர்
பூங்கொடி தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் “நான் முதல்வன்“ திட்டத்தின் கீழ், 12-ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளின் உயர் கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரிக் கனவு” நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் முன்னிலையில் திண்டுக்கல் ஜி.டி.என். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று(09.05.2024) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி பேசியதாவது:-
தமிழகத்தில் பள்ளி. கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் ஆகியோரை படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய “நான் முதல்வன்“ என்கிற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கென naanmudhalvan.tnschools.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.


இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ. மாணவிகளின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பது ஆகும். அடுத்தடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்பது குறித்தும், தமிழில் தனித்திறன் பெற சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசுவதற்கும்.

நேர்முக தேர்வுக்கு தயாராவது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
இவற்றைத் தவிர, மனநல மருத்துவர்கள், உடல்நல மருத்துவர்களைக் கொண்டு திடமான உணவு வகைகள் உட்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்குவதுடன். உடற்பயிற்சி, நடை உடை நாகரீகம், மக்களோடு பழகுதல், ஆகியவை குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. தமிழ்ப்பண்பாடு, மரபு குறித்த விழிப்புணர்வும் மாணவ, மாணவிகளிடம் ஏற்படுத்தப்படுகிறது.


இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில், உயர்கல்வி தொடர்பாக மாணவர்களை ஊக்குவித்தல், பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல், வணிகம் மற்றும் கணக்குப்பதிவியல், சட்டம், கால்நடை, வேளாண்மை, மீன்வளத்துறை சார்ந்த படிப்புகள், அரசு வேலைவாய்ப்புகள், வங்கிக் கடனுதவிகள், கல்வி உதவித்தொகைகள் தொடர்பாக விளக்கம், வேலைவாய்ப்புத்துறை சார்பில் உயர்கல்வி, வேலைவாய்ப்புகள், முன்னோடி வங்கி சார்பில் கல்விக் கடனுதவிகள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் உயர்கல்வி படிக்க தேவையான விடுதி வசதிகள் குறித்தும், கல்வி உதவித்தொகை குறித்தும், மாவட்ட சமூக நலத்துறை சார்பில் மூவாலுார் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் குறித்தும், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வது தொடர்பாகவும் விளக்கம் அளிக்கப்படுகிறது.
பொறியியல், மருத்துவம், வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணாக்கர்கள் கல்விக் கடனுதவி பெற்று பயன்பெறலாம். தகுதியுள்ள அனைவருக்கும் கடனுதவி கிடைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் முழு முயற்சி மேற்கொள்ளப்படும். மேலும், மாணவ, மாணவிகள் கடன் பெறுவதற்கென உள்ள இணைதளம் www.vidyalakshmi.co.in விண்ணப்பித்து கல்விக் கடன் பெறலாம். கடந்த கல்வி ஆண்டில் மாவட்டம் முழுவதும் பல்வேறு வங்கிகள் சார்பில் 300க்கும் அதிகமான மாணவ, மாணவிகளுக்கு சுமார் 18 கோடி ரூபாய் வரை கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
இங்கு தெரிவிக்கப்படும் கருத்துக்களை மாணவ, மாணவிகள் நன்கு கவனித்து தங்கள் உயர்கல்விக்கு தேவையான அறிவுரைகளை பயன்படுத்தி, உயர்கல்வி கற்று தங்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி பேசினார்.

இந்நிகழ்ச்சியில், அண்ணா பல்கலைக்கழகம், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள் சார்பில் ஐடிஐ, பாலிடெக்னிக், பட்டப்படிப்பு, தொழில்படிப்புகள் உள்ளிட்ட உயர்கல்வி வழிகாட்டல் தொடர்பாக 15க்கும் அதிகமான அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த அரங்குகளை மாணவ, மாணவிகள் பார்வையிட்டு, என்னென்ன படிப்புகள், எந்தெந்த கல்லுாரிகளில் உள்ளன, அந்த படிப்புகளில் சேரும் வழிமுறைகளை கேட்டறிந்துகொண்டனர்.

பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்துார், நத்தம் போன்ற பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் 30க்கும் அதிகமான வாகனங்களில் அழைத்துவர மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 2100 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வெயில் தாக்கம் காரணமாக மாணவ, மாணவிகளுக்கு திடீர் உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திண்டுக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி மௌனிகாஸ்ரீ தெரிவித்ததாவது:-
நான் பன்னெரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளேன். பள்ளியில் படிக்கும்போதே, நான் முதல்வன் திட்டம் குறித்தும், அதன்மூலம் அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்தும் ஆசிரியர்கள் எங்களுக்கு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நான்முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி படிப்புக்கு வழிகாட்டும் கல்லுாரிக்கனவு நிகழ்ச்சி ஜிடிஎன் கல்லுாரியில் நடைபெறுவதை அறிந்து, இந்நிகழ்ச்சியில் நானும் எனது சக தோழிகளும் கலந்துகொண்டோம்.
உயர்கல்வியில் என்னென்ன படிப்புகள் உள்ளன, எந்தெந்த கல்லுாரிகளில் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது குறித்து தெளிவாக அறிந்துகொண்டோம். உயர்கல்வி முடித்த பின்னர் அது தொடர்பான வேலைவாய்ப்புகள், போட்டித் தேர்வுகள், போட்டித்தேர்வுகளை எதிர்கொள்வது தொடர்பாகவும் பயிற்சி அளித்தனர். இது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
இதுதவிர கிராமப்புற பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகளை அழைத்து வர வாகன வசதிகள், பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு, மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்து, மாணவ, மாணவிகளின் உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில் சிறப்பான ஏற்பாடுகளை செய்துகொடுத்த திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்திற்கு மாணவ, மாணவிகள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திண்டுக்கல் எம்எஸ்பி பள்ளி மாணவன் முகம்மது தௌபிக் தெரிவித்ததாவது:-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெறுவதை அறிந்து எங்கள் பள்ளி மாணவர்களுடன் கலந்துகொண்டேன். பன்னெரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர் உயர்கல்வி படிப்புகள் என்னென்ன உள்ளன, எந்த கல்லுாரிகளில் எந்த படிப்புகள் உள்ளன என்பதை அறிந்துகொண்டோம். தொழிற்படிப்புகள், மருத்துவம், வேளாண்மை, கலை மற்றும் அறிவியல் பாடங்கள் தொடர்பான பல்வேறு தகல்களை அறிந்துகொண்டோம். இது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
மாணவ, மாணவிகளின் உயர்கல்வித் தரத்தை மேம்படுத்த இதுபோன்ற சிறப்பான வழிகாட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்திற்கு மாணவ, மாணவிகள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பழனி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சத்தியபிரியா தெரிவித்ததாவது:-
நான் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளேன். அதன்பின்னர் உயர்கல்வி என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பதை முடிவு செய்ய முடியாமல் குழப்பத்தில் இருந்தேன். அப்போதுதான் திண்டுக்கல் ஜிடிஎன் கல்லுாரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லுாரிக்கனவு நிகழ்ச்சி நடைபெறுவதை ஆசிரியர்கள் மூலம் அறிந்து, நானும் என்னுடன் பயின்ற மாணவிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டோம்.
இங்கு உயர்கல்வி தொடர்பாகவும், கல்விக்கடனுதவிகள், வேலைவாய்ப்புகள், போட்டித்தேர்வுகள் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர். இதன்மூலம் உயர்கல்வி பயிலுவதில் இருந்த குழப்பங்கள் தீர்ந்து எங்களுக்கு ஒரு தெளிவு கிடைத்துள்ளது. இதுபோன்ற சிறப்பான வழிகாட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்திற்கு மாணவ, மாணவிகள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன், என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் உதவி இயக்குநர் பிரபாவதி, ஜிடிஎன் கல்லுாரி தாளாளர் ரத்தினம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.நாசருதீன், மாவட்ட முன்னோடி வங்கி மண்டல மேலாளர் அருணாச்சலம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *