நாகப்பட்டினம் செய்தியாளர் க.சக்கரவர்த்தி
நூறு ஆண்டுகளுக்கு மேலாக நாகப்பட்டினத்தில் இயங்கிவந்த மாவட்டத் தலைமை மருத்துவமனை, மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற அரசின் முடிவின்படி, நாகப்பட்டினம் அருகில் ஒரத்தூர் கிராமத்தில் அமையப்பெற்றுள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பாட்டை ஒட்டி நாகப்பட்டினத்தில் இயங்கிவந்த மருத்துவமனையின் பெரும்பாலான மருத்துவப் பிரிவுகள் ஒரத்தூருக்கு மாற்றப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் ஒரத்தூரில் செயல்படும் மருத்துவக் கல்லூரி சென்றுவர சரியான போக்குவரத்து வசதிகள் இல்லை, இருப்பதாக சொல்லப்படும் சில பேருந்து வசதிகள் போதுமானதாக இல்லை என்பதோடு, ஒரத்தூர் வழியாக செல்லும் பேருந்துகள் நிறுத்தும் இடத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் அளவுக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை என்பது நோயாளிகள், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு மிகுந்த சிரமத்தை உருவாக்குவதாகும்.
முழுமையான போக்குவரத்து வசதிகள் செய்து தர வேண்டும், முழுமையான தண்ணீர் வசதிகள் செய்து தர வேண்டும், மருத்துவர் மற்றும் ஊழியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும்,
வரும் வழியில் ஏற்பட சாத்தியமான திருட்டு, வழிப்பறி உள்ளிட்டவற்றை தடுக்கும் விதமாக ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி முதல் பாப்பா கோயில் வரை முழுமையான லைட் வசதி மற்றும் கண்காணிப்பு கேமரா வசதிகள் செய்து தர வேண்டும்,
நாகப்பட்டினம் சுற்று வட்டாரங்களில் வசிக்கும் மக்களின் பயன்பாட்டிற்காக தற்போதைய மருத்துவமனையிலேயே தஞ்சாவூர் இராஜாமிராசுதார் மருத்துவமனையில் செயல்படுவதைப்போன்று மகளிர் மற்றும் குழந்தைகள் நலப் பிரவு மற்றும் குறைந்த அளவு படுக்கை வசதியுடன் அவசர சிகிச்சை பிரவு நாகப்பட்டினம் மருத்துவமனை தொடர்ந்து செயல்பட வேண்டும் எனவும், அதேபோல் புற்றுநோய், காசநோய், தொழுநோய் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவுகள் இதே வளாகத்தில் செயல்பட வேண்டும்
எனவும், இயன்முறை சிகிச்சை மையம் மற்றும் இந்திய மருத்துவ பிரிவுகளில் வரும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, இயற்கை முறை உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் உள் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு பயன்பெறும் வகையில் இந்த மருத்துவமனை வளாகம் செயல்பாட்டிற்கு வர வேண்டும், இருக்கின்ற மருத்துவமனையை இழந்துவிட்டோமோ என்று ஆதங்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அனைத்து பிரிவினரையும் அழைத்துப் பேசி முறையான அறிவிப்பை / ஆணையை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்
எனவும் கேட்டுக்கொள்கிறோம் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ( 14.05.24 ) மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை முனபு மாவட்டத் தலைவர் பா.ராணி தலைமையில் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் அ.தி.அன்பழகன் விளக்கவுரையாற்றினார். கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் முத்துராஜா, சாலைப் பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் கணேசன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டப் பொருளாளர் மீனாட்சி, அரசு செவிலியர் சங்கத் தலைவர் ப.ஜீவானந்தம், ஓய்வூதியர் சங்க மாவட்டப் பொருளாளர் எம்.பி.குணசேகரன், இந்திய தொழிற்சங்க மையத்தின் மாவட்டச் செயலாளர் தங்கமணி, மருத்துவத்துறை ஊழியர் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவர் ப.அசோகன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் வே.சித்ரா, நகராட்சி மற்றும் மாநகராட்சி ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.மாநிலச் செயலாளர் சா.டானியல் ஜெயசிங் நிறைவுரையாற்றினார்.இறுதியாக மாவட்டப் பொருளாளர் ப.அந்துவன்சேரல் நன்றியுரையாற்றினார்.40 பெண் ஊழியர்கள் உட்பட 80-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
நாகப்பட்டினம் நிருபர் க.சக்கரவர்த்தி