விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் பயனாளர் சங்கம் சார்பில் தாம்பரம்-கொச்சுவேலி சிறப்பு வண்டி(06035) முதல் சேவையை வரவேற்கும் விதமாக, காலை 06.50 மணிக்கு, ராஜபாளையம் ரயில் நிலையத்தில் சிறப்பு ரயிலுக்கு மாலை அணிவித்து, ரயில் ஓட்டுநர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. இவ்வண்டியில் பயணித்து இராஜபாளையம் வந்தடைந்த பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இது தொடர்பாக இச்சங்கத்தின் தலைவர் ‘சுகந்தம்’ ராமகிருஷ்ணன் கூறும்போது,
கிட்டத்தட்ட 48 ஆண்டுகளுக்குப் பின் கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தோடு ராஜபாளையம் ரயில் வழித்தடம் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகளுக்கு பெரும் பயனளிக்கும். மேலும் இந்த ரயிலில் அனைத்துத் தரப்பு மக்களும் பயன் பெறும் விதமாக ஸ்லீப்பர் மற்றும் முன்பதிவில்லா பெட்டிகளை இணைத்து இயக்க தெற்கு ரயில்வே அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும்,
ராஜபாளையம் வழியாக கேரளத் தலைநகருக்கு ஒரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்ற சங்கத்தின் கோரிக்கையை ஏற்று சிறப்பு ரயிலை இயக்கிய ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனக் கூறினார்.
இந்தச் சிறப்பு ரயிலில் ராஜபாளையத்தில் 127 பேரும், தென்காசியில் 197 பேரும், மதுரையில் 323 பேரும் பயன்படுத்தினர். இச்சிறப்பு ரயிலின் முதல் சேவை 101% பயன்பாட்டுடன் முழுவதும் நிரம்பியது குறிப்பிடத்தக்கது.