தென்காசி, மே – 17
தென்காசி வட்டார வளமையத்தில் நான் முதல்வன திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு தென்காசி வட்டார வளமையத் திற்கு உட்பட்ட 6 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர் கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்கும் குழு அமைக்கப் பட்டுள்ளது. இக்குழுவில் உள்ள 73 உறுப்பினர்களுக்கு 09.05.2024 அன்று ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது –
இப்பயிற்சியை தென்காசி மாவட்ட உதவி திட்ட அலுவலர் க.சீவலமுத்து தொடங்கி வைத்தார். வட்டார வளமைய மேற்பார்வை யாளர் இரா.சரஸ்வதி வரவேற்று பேசினார். உயர் கல்வி வழிகாட்டி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகராஜ் சிறப்புரை ஆற்றினார்.
இப்பயிற்சியில் உயர்கல்வி வழிகாட்டல் குழுவின் பணிகள் பற்றி எடுத்துக்கூறப்பட்டது. தென்காசி வட்டார வளமையத் திற்கு உட்பட்ட அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் தற்போது மேற்கொள்ள வேண்டிய உயர்கல்விக்கான படிப்புகள், நுழைவுத்தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்பு அதிகமாகவுள்ள பாடப்பிரிவுகள், கல்லூரிகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
வேலைவாய்ப்பிற்கு தகுதியான படிப்புகள் அதற்கான கால அளவுகள், தேர்ச்சி முறைகள் பற்றி விளக்கப்படம் மூலம் எடுத்துக்கூறப்பட்டது. கல்லூரியில் இணைவதற்கு தேவைப்படும் சான்றிதழ்கள் அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகள் பற்றியும் விளக்கிக் கூறப்பட்டது.
12 ம் வகுப்பில் தேர்ச்சி அடைந்தவர் மட்டுமின்றி தோல்வி அடைந்தவர்களும் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் பள்ளிக்கு அழைத்து அவர்களுக்கு துணைத்தேர்விற்கு விண்ணப்பித்து
அதற்கு தேவையான கற்றல் கையேடுகள் கொடுத்து அவர்களை துணைத்தேர்வில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றுக் கூறப்பட்டது.மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கு தேவைப்படும் கல்விக் கடன்கள் பெறும் வழிமுறைகள், 7.5% இட ஒதுக்கீடு முறை, புதுமைப்பெண் கள் திட்டம் தமிழ்ப்புதல்வன் திட்டம்
பற்றியும் எடுத்துக்கூறப்பட்டது.
இப்பயிற்சியில் ஆசிரியப் பயிற்றுநர்கள் பார்வதி, பூமாரி,சௌந்திரவல்லி, அற்புதமாரி, மாரிமுத்து ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.