வலங்கைமான் அருகே உள்ள சாரநத்தம் ஊராட்சி, வேடம்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி சிபிஎம் மற்றும் ஊர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சாரநத்தம் ஊராட்சி, வேடம்பூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில், ஒரு பகுதியில் உள்ள ஓட்டு கட்டிடத்தை இடித்துவிட்டு அந்த இடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் நடவடிக்கை அரசு மேற்கொண்டு வருகிறது.
இதனை கண்டித்து சிபிஎம் கட்சியின் வேடம்பூர் கிளை செயலாளர்தியாகராஜன் தலைமையில் அந்தப் பகுதியின் பொதுமக்கள், மாணவர்கள் எதிர்கால நலனை பாதிக்கும், ஆகவே பள்ளி வளாகத்தில் கட்டிடம் கட்டும் முயற்சியை கைவிட வேண்டும். இப்பள்ளி தொடக்க பள்ளியாக இருந்து தற்போது நடுநிலைப் பள்ளியாக உள்ளது. கொக்கலாடி, வேடம்பூர், சாரநத்தம், மானாநல்லூர், வயலங்குடி உள்ளிட்ட கிராமப் பகுதி மக்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
ஆகவே இப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், பள்ளி வளாகத்தில் கட்டிடம் கட்டும் முயற்சியை உடனே கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் சிபிஎம் ஒன்றிய செயலாளர் இராதா, மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் இளங்கோவன், பி. விஜய் ஆகியோருடன் பொதுமக்கள் மத்தியில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சு வார்த்தையில் வலங்கைமான் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில் பிரச்சனையை பேசி தீர்த்துக் கொள்ளலாம், தற்போது சாலை மறியல் கைவிட வேண்டும் என காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்,
இதனை அடுத்து தற்காலிகமாக சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.