தென்காசி, மே – 27
தென்காசி மாவட்டம் ,செங்கோட்டை அருகே உள்ள புளியரை பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திய 10 அடி நீளமுள்ள ராஜ நாகத்தை உயிருடன் பிடித்த தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
செங்கோட்டை அருகே உள்ள புளியரை பகுதியில் ராபர்ட் என்பவருக்கு சொந்தமான வயல் பகுதியில் உள்ள கூரை செட்டில் சுமார் 10 அடி நீளம் உள்ள நடமாடியுள்ளது.
இதனைப் பார்த்த அதன் உரிமையாளர் ராபர்ட் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியும் பீதியும் அடைந்தனர்.
இது பற்றி உடனடியாக செங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த செங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய சிறப்பு நிலைய அலுவலர் கே.வி. மாரியப்பன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சண்முகவேல், சந்திரமோகன், மணிகண்டன், கோமதி சங்கர், கார்த்தி ,கோமதி சங்கர், ஆகியோர்கள் புளியரை பகுதிக்கு விரைந்து சென்றனர்.
அதன் பின் பாதுகாப்பு உபகரணங்களுடன் அந்தப் பகுதியில் நடமாடிய 10 அடி நீளமுள்ள ராஜ நாகத்தை தேடினார்கள்.
நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு அந்தப் பகுதியில் பதுங்கி இருந்த அந்த ராஜ நாகம் தீயணைப்பு படையினரை பார்த்து ஆக்ரோஷமாக சீறியது.
ஆனாலும் அந்த ராஜ நாகத்தை செங்கோட்டை தீயணைப்பு படையினர் மிகவும்துணிச்சலுடன் லாபகமாக உயிருடன் பிடித்தனர்.
அதன்பின் அந்த ராஜ நாகத்தை செங்கோட்டை வனவர் முருகேசனிடம் ஒப்படைத்தனர் வனவர் முருகன் அந்த ராஜ நாகத்தை மிகவும் பாதுகாப்பாக கொண்டு சென்று மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டுச் சென்றார்.
இதை அறிந்த புளியரை பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் செங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் தெரிவித்தனர்.