திருவாரூர், ஜூன் 6 –
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மெயின் ரோட்டில் ஆபத்தான நிலையில் ஆழமான பெரும் பள்ளத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
திருவாரூர் – மன்னார்குடி பிரதான சாலையில், கூத்தாநல்லூர் மரக்கடை அருகே மெயின் ரோட்டில் பெரும் பள்ளம் காணப்படுகிறது. மெயின் ரோட்டில் இருந்து சாலையின் குறுக்கே வெட்டப்பட்டு அருகேயுள்ள ராஜகோபாலசாமி தோட்டம் தெருவிற்கு செல்லும் படியாக குடிநீர் குழாய் பதித்துள்ளனர்.
குடிநீர் குழாய் பதித்த பிறகு இப்பள்ளத்தை சரியாக மூடப்படாததால் அந்த இடத்தில் பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளன.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கவனிப்பாற்ற நிலையில் இப்பள்ளம் மூடப்படாமல் உள்ளன. பிரதான இச்சாலை வழியாகத்தான் திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, பாண்டிச்சேரி, மயிலாடுதுறை, மன்னார்குடி, தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் முக்கிய சாலையாகும்.
இச்சாலை வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகளும், ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்களும்,நான்கு சக்கர வாகனங்களும் செல்லக்கூடிய இச்சாலை மிக முக்கியமான சாலையாகும். சாலையின் நடுவே உள்ள பள்ளத்தால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இச்சாலை வழியாக இரவு நேரங்களில் செல்பவர்கள் இப்பள்ளத்தில் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்படும் அவல நிலையில் உள்ளார்கள்.
அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இப்பள்ளத்தில் ஒரு பெரும் குச்சியை நட்டு வைத்து எச்சரிக்கைக்காக சிவப்பு கலர் துணியையும் கட்டி வைத்துள்ளனர்.
உயிர்பலி ஏற்படும் முன்னே சம்பத்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து இப்பள்ளத்தை மூடப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.