கொளத்தூரில் புதிய துணிகடை கடை திறப்பு விழாவுக்கு முண்டியடித்த கூட்டத்தால் பரபரப்பு.
திறப்பு விழா நாளில் கடையை மூடிய பரிதாபம்
பெரம்பூர் கொளத்தூர் ரெட்டேரி செல்லும் பேப்பர் மில்ஸ் சாலையில் ரெட்சீட் என்கின்ற புதிய ரெடிமேட் ஆடைகள் சில்லறை விற்பனை கடை துவக்க நாளை முன்னிட்டு 9 ரூபாய்க்கு மூன்று வகையான துணிமணிகள் மற்றும் காலணிகள் சலுகையில் கொடுக்கப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டது.
இதன் துவக்க நாளான இன்று அந்த விளம்பரத்தை பார்த்து அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான ஆண்கள் பெண்கள் என சுமார் 500 க்கும் மேற்பட்டோர் தற்போது அந்த கடையின் முன்பு குவிந்தனர். மேலும் இந்த செய்தி காட்டு தீ போல பரவியதால் தற்போது அந்த புதிய கடைக்கு பொதுமக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர் .
இதன் காரணமாக பேப்பர் மில்ஸ் சாலையில் போக்குவரத்து மிகவும் தடைப்பட்டதால் போக்குவரத்து போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தனர். அதன் பின்னர் கொளத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின் பேரில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர் .நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே பிறப்பு விழா கண்ட கடையை உடனடியாக போலீசார் மூடச்சொன்னதின் பேரில் கடையின் ஷட்டர் மூடப்பட்டது .
இதன் காரணமாக மக்கள் கூட்டம் கலைய தொடங்கியது. ஒன்பது ரூபாய்க்கு மூன்று வகை துணிகளை பெறலாம் என நம்பி வந்த பொதுமக்கள் கூட்டம் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடை பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடை திறப்பு நாள் அன்றே கடையை மூடிய சம்பவத்தால் அதன் உரிமையாளர்கள் மிகவும் கலக்கத்தில் உறைந்தனர்.