நாமக்கல் மாவட்டம் பரமத்தியை அடுத்த உள்ள கபிலர்மலையைச் சேர்ந்தவர் ரமேஷ் விவசாயி இவரது மகன் சுதர்சன் (14), அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி ராமசாமியின் மகன் லோகேஷ் 17, சிறுவன் சுதர்சன் ஆறாம் வகுப்பு முடித்த நிலையில் பள்ளி செல்லாமலும், லோகேஷ் ஒன்பதாம் வகுப்பு முடித்த நிலையில் பள்ளி செல்லாமல் இருப்பதாக தெரிகிறது..
இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு லோகேஷின் தந்தை ராமசாமிக்கு சொந்தமான (மாருதி ஆம்னி) காரை எடுத்துக் கொண்டு கார் ஓட்ட கற்றுக் கொள்வதற்கு சிறுவர்கள் லோகேஷ் சுதர்சன் இருவர் மட்டும் வெளியே சென்றுள்ளனர்.
காரை சுதர்சன் (14) ஓட்டிச் சென்றுள்ளார். அவர்கள் பரமத்தி – கபிலர்மலை நெடுச்சாலையில் காரை ஓட்டி சென்ற போது, எதிரே வந்த சொகுசு கார் (FORTUNER) மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.
இதில் சிறுவர்கள் ஓட்டி வந்த ஆம்னி கார் அப்பளம் போல் நொறுங்கி, இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜேடர்பாளையம் போலீசார் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சிறுவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 வயது சிறுவன் காரை ஓட்டி ஏற்படுத்திய விதத்தில் இரண்டு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.