தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மற்றும் பெண் விவசாயிகள் சங்கம் சார்பில் பாரம்பரிய விதை திருவிழா மற்றும் கருத்தரங்கம்-பள்ளி மாணவிகள் நடனமாடி விழிப்புணர்வு
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மற்றும் பெண் விவசாயிகள் சங்கம் சார்பில் பாரம்பரிய விதை திருவிழா மற்றும் சிறுதானிய உணவு மீட்டெடுத்தல் கருத்தரங்கம் தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பெண் விவசாயிகள் கேழ்வரகு, பனிவரகு, திணை ,சாமை, வரகு, கம்பு, சோளம், அரிசி,கோதுமை ஆகியவைகளை மண்பானை மூலம் எடுத்துக் கொண்டு பாரம்பரிய விதையை மீட்டெடுத்து, சிறுதானிய உற்பத்தியை பெருக்கி மக்களின் ஆரோக்கியத்தை காப்போம் என கோசமிட்டு ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
அதனை தொடர்ந்து கிராமிய கும்மி பாடலுக்கு நடனமாடி சிறுதானியங்களே மீட்டெடுப்போம் என்று பெண் விவசாயிகளிடையே பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும்,பெண் விவசாயிகள் சங்க மாநில தலைவி பொன்னுதாய் பேசுகையில் சிறுதானிய விவசாயிகளை அரசு பாதுகாத்து, விலைநிர்ணயம் செய்யப்பட வேண்டும்.சத்தீஸ்கர் ,ஒடிசா அரசு போல மானவாரி பயிரான சிறுதானிய உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு தண்ணீர் மின்சார செலவினை மீதப்படுத்தி ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
நியாய விலைக்கடை , மாணவ விடுதிகள் அரசுமருத்துவமனை,அம்மா உணவகம், சிறைச்சாலை போன்ற அரசு உணவுகளில் சிறு தானிய உணவுகளை வழங்கிட வேண்டும்.சிறுதானியம் உற்பத்தி செய்யும் சிறு குறு விவசாயிகளின் விவசாய வேலைகளை, ஊரக 100 நாள் வேலை திட்டத்தில் உள்ளடக்க வேண்டும்,பஞ்சாயத்து அளவில் சிறுதானிய கிடங்குகள் அமைத்து பாரம்பரிய விவசாய பொருட்களை அங்கு சேமித்து பராமரித்து பாதுகாத்து விநியோகம் செய்யவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.