செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த நல்லூர் கிராமத்தில் தியானபூமி பவுண்டேஷன், சீல்டு இன்டர்நேஷனல் பவுண்டேஷன் இணைந்து சர்வதேச யோகா தினம் தியான பூமி பவுண்டேஷன் நிறுவனர் திருமூலர் சத்யா தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக பாலம் அமைப்பின் நிறுவனர் பத்மஶ்ரீ பாலம் கல்யாண சுந்தரம், ஆன்மீக சொற்பொழிவாளர் மீனாட்சிசுந்தரம், ஷீல்ட்டு இன்டர்நேஷனல் குரூப் தலைவர் டாக்டர் கணேஷ் ஆச்சார்யா, அங்குபஞ்சர் டாக்டர் சங்கர் மற்றும் தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் முனைவர் இறையன்பு ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவியரிடையே சிறப்புரையாற்றினர்.
கல்லூரி மாணவ மாணவியர் முன் பேசிய முனைவர் இறையன்பு அன்பேனும் பிடியில் அகப்படும் மலையே, அன்பெனும் பிடிக்கு அழகே .. என அன்பு ஒன்று போதும் இந்த உலகத்தில் அனைத்தையும் கரைத்து விடும். இந்த உலகத்தில் எந்த சண்டையும் சச்சரவும் இல்லாமல் பிரிவு பேதமில்லாமல் வேறுபாடுகள் இல்லாமல் மனிதர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றால் அன்பு ஒன்றுதான் மூலப்பொருள்.
இதைத்தான் திருமூலர் அன்றே சொன்னார் அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார், அன்பும் சிவமும் ஒன்றன்று அறிவேன், அன்பும் சிவமும் ஒன்று என்று அறிந்தவர்கள் அன்பில் உருவானவர்களாக இருப்பார்கள், சிவமாக இருப்பார்கள் ! அதனால் எளிய மக்களுக்கு உங்களால் முடிந்ததை செய்யுங்கள். யோகாவிலே நீங்கள் பல உடற்பயிற்சிகளை செய்தீர்கள்.
இதற்கும் ஆன்மீகத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்டால் “இது உடலை நெறியாக வைத்துக் கொள்ளக் கூடியது ” என்று குறிப்பிட்டார். உடலை நெறியாக வைத்து கொள்ளவில்லை என்றால் அந்த உடம்பை கொண்டு உடம்பைக்கடக்கும் உபாயத்தை கைக்கொள்ள முடியாது. இதைத்தான் “உடம்பால் அழியிர் உயிரார் அழிவர் ” என்று குறிப்பிட்டார். நீங்கள் உடலை நெறியாக வைத்துக்கொள்வதன் மூலம் மனதை நெறியாக வைத்துக் கொள்ளலாம்.
மற்றவர்களிடம் பழகுவதை நெறியாக வைத்துக் கொள்ளலாம். அதற்கு இது ஒரு பாலமாக இருக்கும் என்பது தான் உண்மை. எனவே நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அன்பு செலுத்துவதை மட்டும் மேற்கொள்ளுங்கள் அதுவே ஆன்மீகத்தின் உயர்ந்த பணியாக இருக்கும். எந்த பிரிவினை இருந்தாலும் எல்லா மனிதர்களையும் நேசிக்க கற்று கொள்ளுங்கள்.
அது தான் திருமூலர் சொன்ன வழி அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார் ” என்பதை மனதில் வைத்துக் கொண்டு அன்பே சிவமாய் நீங்கள் இருக்க வேண்டும் என்றார். யோகா பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவியருக்கு சான்றிதழை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவியர், பேராசிரியர்கள், தியானம் பவுண்டேஷன் தன்னார்வலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை தொகுப்பாளர் ஞானசி தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.