விருதுநகர் மாவட்டத்தின் அடையாளமாக கடந்த 1968 ஆம் ஆண்டு ராஜபாளையம் அருகே உள்ள ஆலங்குளத்தில் அரசு சிமெண்ட் ஆலை துவக்கப்பட்டது.
திமுக ஆட்சியில் முதல்வராக இருந்த மு. கருணாநிதியால் துவக்கப்பட்டு பல ஆண்டு காலமாக சீரும் சிறப்புமாக நடைபெற்று வந்தது. இப்பகுதியில் பூமிக்கு அடியில் உள்ள சுண்ணாம்பு கற்கள் இன்னும் 170 ஆண்டுகளுக்கு மேல் சிமெண்ட் அரவைக்காக தோண்டி எடுக்க கூடிய அளவிற்கு வளம் வாய்ந்ததாக இருக்கிறது.
இந்நிலையில் இந்த ஆலங்குளம் அரசு சிமெண்ட் ஆலை படிப்படியாக தேய்ந்து தனியார் சிமெண்ட் ஆலைகளுடன் ஈடு கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டு, தற்போது ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சிமெண்ட் ஆலை ஈரப்பத முறையில் உள்ள எந்திரங்களை உலர் பதன முறைக்கு மாற்றி செயல்படுத்துவதற்கு கடந்த ஜெயலலிதா ஆட்சியின்போது ரூ.110- கோடி அறிவிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை அந்த நிதி ஒதுக்கப்படவில்லை. பின்னர் திமுக ஆட்சியின் போதும் இந்த ஆலையை நவீனப்படுத்தி சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு அந்த நிதியும் இன்று வரை செயல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் ஆலை இயங்காத அளவிற்கு ஆலை இயக்கத்தை நிறுத்துவதற்கான முடிவுகள் மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் வந்தன.
இதற்காக ஆலை பாதுகாப்பு கமிட்டி அமைக்கப்பட்டு இதுவரையிலும் பல்வேறு நடவடிக்கை எடுத்ததின் பயனாக ஆலை இயக்கம் நிறுத்தப்படாமல் இன்றுவரை தொய்வில்லாமல் நடத்தப்பட்டு வருகிறது.
இது தவிர ஒப்பந்த பணியாளர்கள் நிரந்தரம் செய்யாத நிலையில் பலர் ஓய்வு பெற்று, பலர் வேலையை விட்டு போய் விட்டார்கள்.
இது தவிர ஆலங்குளம் சிமெண்ட் ஆலை நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வரும் டான்செம் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி எந்த ஒரு வசதியும் செய்யாமல் தற்போது இப்பள்ளி மூடப்படும் அபாயத்தில் உள்ளது.
இங்கு பணியாற்றும் ஆசிரியைகள் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. எனவே இந்த பள்ளியையும் முறையாக செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை அரசு ஏற்படுத்த வேண்டும் என்று கூறி ஆலங்குளம் முக்கு ரோட்டில் அனைத்து கட்சி, அனைத்து சமுதாயம், அனைத்து கிராம மக்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகளை விளக்கி ஏராளமானோர் பேசினார்கள். கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மூலம் அரசுக்கு தெரியப்படுத்தி விரைவில் ஆலையை புதுப்பித்து, முன்பு போல் ஆலையை சிறப்பாக நடத்துவதற்கு வழிவகை செய்வதற்கான ஏற்பாடுகளை ஆலை பாதுகாப்பிற்கு கமிட்டி சார்பில் செய்யப்பட்டு வருகிறது.