தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூா், ஜூன்-25. தஞ்சையில் இன்று பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு.முருகானந்தம் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது :-
இன்று வரலாற்றின் கருப்பு நாள். இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது எமர்ஜென்சியை அறிவித்த நாள். எமர்ஜென்சி காலத்தில் அந்த சட்டத்தின் மூலம் பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஏன் திமுகவில் கூட பல தலைவர்கள் கைதாகினர்.
எமர்ஜென்சி காலத்தில் கருத்து சுதந்திரம் முற்றிலும் பறிபோனது. பத்திரிக்கை சுதந்திரம் நசுக்கப்பட்டது, காங்கிரஸ் ஆட்சியில் தான். யார் என்ன பேசினாலும் உடனே கருத்து சுதந்திரம், ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டு உடனே கைது செய்தனர்.
ஆனால் இன்று காங்கிரஸ் கட்சியினருக்கு கருத்து சுதந்திரம் பற்றி பேச என்ன தகுதி உள்ளது.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கருத்து சுதந்திரம் மிகவும் பாதுகாக்கப்பட்டது.
தற்போது பிரதமர் மோடி ஆட்சியில் கருத்து சுதந்திரம், ஜனநாயகம் மதிக்கப்படுகிறது. பிரதமர் குறித்தும், மத்திய அமைச்சர்கள் குறித்தும் எவ்வளவோ பேர் அவதூறாக பேசி உள்ளனர். ஆனால் பிரதமர் மோடியோ கருத்து சுதந்திரத்தை பேணி பாதுகாத்ததால் உண்மைக்கு புறம்பாக தகவல் கூறியவர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து 58 பேர் பலியான சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு சி.பி.ஐ. விசாரணை கண்டிப்பாக தேவை மக்கள் போராட கூடாது என்பதற்காகவே நிவாரணம் அறிவித்துள்ளார்கள்.
கடந்த ஆண்டு கூட விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து சிலர் பலியாகினர். இதுவரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கள்ளக்குறிச்சிக்கு நேரில் செல்லவில்லை. நிவாரணம் அறிவித்தால் மட்டும் போதுமா. இறந்தவர்கள் திரும்பி வரப்போவதில்லை. நிவாரணம் என்பது கண் துடைப்பு தான்.
இந்த சம்பவத்திற்கு கண்டிப்பாக சி.பி.ஐ. விசாரணை தேவை. சி.பி.ஐ. விசாரித்தால் தான் இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது உள்ளிட்ட பல உண்மை தகவல்கள் வெளிவரும். ஆனால் சிபிஐ விசாரணைக்கு ஏன் தமிழக அரசு உத்தரவிடவில்லை என தெரியவில்லை. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும்.
அதே வேளையில் கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும். கள் இறக்க அனுமதி கொடுத்தால் பனைத் தொழிலாளர்கள் பயனடைவர். எனவே பூரண மதுவிலக்கு அமல்படுத்தி கள்ளு கடைகளுக்கு அனுமதி கொடுக்க வேண்டும். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க வேண்டும்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும். முன்னாள் நீதிபதி ஒரு அறிக்கை தயாரித்து முதலமைச்சரிடம் வழங்கியுள்ளார். கையில் கயிறு கட்டக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அதில் கூறியுள்ளார். ஆனால் ஒட்டுமொத்தமாக யாரும் கையில் கயிறு கட்டக் கூடாது என்று அவர் கூறியது ஏற்புடையது அல்ல என்று அவர் கூறினார்.
பேட்டியின் போது தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ், தெற்கு மாவட்ட பொது செயலாளர் முரளிதரன், மாவட்ட மருத்துவ பிரிவு தலைவர் டாக்டர் அருண்பிரசாத், அரசு தொடர்பு பிரிவு மாவட்டத் தலைவர் வக்கீல் சீனிவாசன், தொழில்துறை பிரிவு மாவட்ட தலைவர் பொன். மாரியப்பன், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் சிவபிரகாசம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.