பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற்றது – குன்னம் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய நான்கு வட்டங்களிலும் 1433-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நேற்று (25.06.2024) நடைபெற்றது.

குன்னம் வட்டத்திற்கான வருவாயத்தீர்வாயம் நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம், தலைமையில் குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், எழுமூர் (கிழக்கு), ஆண்டிகுரும்பலூர், அசூர், சித்தளி (கிழக்கு), சித்தளி (மேற்கு), பேரளி (வடக்கு), பேரளி (தெற்கு) மற்றும் ஒதியம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.

பின்னர், இலவச வீட்டுமனைப் பட்டா, இயற்கை மரண உதவித்தொகை, பட்டா மாறுதல், திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு 27 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, இயற்கை மரண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கான ஆணை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) வைத்தியநாதன், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் பாரதிவளவன், வட்டாட்சியர் கோவிந்தம்மாள் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

இதேபோல வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல்பிரபு தலைமையில் நடைபெற்ற வருவாய் தீர்ப்பாயத்தில் பசும்பலூர் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட காரியானூர், பசும்பலூர் (வடக்கு), பசும்பலூர் (தெற்கு), பாண்டகபாடி, திருவாளந்துறை மற்றும் அகரம் ஆகிய கிராமங்களில் இருந்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் சு.கோகுல்,தலைமையில் நடைபெற்ற வருவாய் தீர்ப்பாயத்தில் கொளக்காநத்தம் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட காரை (மேற்கு), தெரணி, அயினாபுரம், கொளக்காநத்தம், கொளத்தூர் (மேற்கு) மற்றும் கொளத்தூர் (கிழக்கு) ஆகிய கிராமங்களில் இருந்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் சங்கரராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வருவாய் தீர்ப்பாயத்தில் பெரம்பலூர் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர் (தெற்கு), பெரம்பலூர் (வடக்கு), அரணாரை (வடக்கு), அரணாரை (தெற்கு) மற்றும் புதுநடுவலூர் ஆகிய கிராமங்களில் இருந்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
இன்றைய வருவாய்த்தீர்வாயம் நிகழ்ச்சியில் குன்னம் வட்டத்தில் 115 மனுக்களும், வேப்பந்தட்டை வட்டத்தில் 126 மனுக்களும், ஆலத்தூர் வட்டத்தில் 70 மனுக்களும், பெரம்பலூர் வட்டத்தில் 225 மனுக்களும் பெறப்பட்டுள்ளது.

மேலும், 26.06.2024, 27.06.2024 ஆகிய நாட்களில் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வருவாய் தீர்ப்வாயம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *