காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது.

புதிய வீடு கட்டுதல், திருமணம், பதவி உயர்வு ஆகியவற்றிற்கு பரிகார தலமாகவும் பிரார்த்தனை தலமாகவும் இத்திருக்கோயில் விளங்குகிறது.

இங்குள்ள முருகப்பெருமான் மீது அருணகிரிநாதர் எட்டு திருப்புகழ் பாடியுள்ளார். இங்கு கருவறையில் முருகப்பெருமான் கம்பீரமாக 7 அடி உயரத்துடன் தேவியருடன் காட்சியருளுகின்றார்.

இங்கு செவ்வாய்,வெள்ளி ஆகிய கிழமைகளில் 6 வாரங்கள் வந்து வழிபடுவோருக்கு சொந்த வீடு , திருமணம், குழந்தைப் பேறு ஆகியன கிடைப்பதால் விஷேச நாட்களில் இக்கோயிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வந்து வழிபடுகின்றனர்.

புராண காலத்தில் பகீரதன் எனும் அரசன் வல்லக்கோட்டைக்கு வந்து முருகப் பெருமானை வழிபட்டு இழந்த இராஜ்ஜியத்தை பெற்றதாகவும் அதனால் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இத்தலத்திற்கு வந்து வழிபடுவோருக்கு இழந்த செல்வங்கள், சொந்த வீடு, உயர்பதவி ஆகியன கிடைப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

மேலும் இந்திரன் இத்தலத்திற்கு வந்து முருகப்பெருமானை பூசித்து இந்திராணியை மணந்தான். அதனால் இந்த கோயிலுக்கு திருமணமாகாத ஆண்களும் பெண்களும் அதிகளவில் வந்து வழிபடுகின்றனர்.

பல சிறப்புகள் பெற்ற இத்திருக்கோயிலில் ஆனி மாத கிருத்திகையினை முன்னிட்டு மூல மூர்த்திகளுக்கும் உற்சவருக்கும் பால் அபிஷேகம் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து கருவறையில் உள்ள மூலவர் சுப்பிரமணியசுவாமி சந்தன காப்பு அலங்காரத்திலும் வள்ளி தெய்வானை குங்கும காப்பு அலங்காரத்திலும் அருள்பாலித்தனர்.

உற்சவர் முருகப்பெருமானுக்கு இரத்தினாங்கி அணிவிக்கப்பட்டு மலர் அலங்கார சேவையில் சஷ்டி மண்டபத்தில் பக்தர்களுக்குக் காட்சியருளினார்.

செவ்வாய்க்கிழமை மற்றும் கிருத்திகை என்பதால் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வல்லக்கோட்டைக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி அரோகரா அரோகரா என்று கோஷமிட்டு முருகப்பெருமானை வழிபட்டனர். சென்னையிலிருந்து ஏராளமான பக்தர்கள் மலர் காவடிகள் சுமந்து வந்து பெருமானை வழிபட்டனர்.

திருக்கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம், மோர், குடிநீர் ஆகியன வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *