நாமக்கல் நகராட்சி பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா, சர்வதேச நெகிழி பை இல்லா தினத்தை முன்னிட்டு விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மஞ்சப் பைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம் என்பது ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 3ம் தேதி சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் தீங்கான பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், நிலையான மாற்றுகளைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள மக்கள் சமூகங்கள் மற்றும் வணிகங்கள் பிளாஸ்டிக் பைகளை சார்ந்திருப்பதை குறைப்பதற்கும், மாற்றாக சுற்றுச் சூழலுக்கு உகந்த பைகளை பயன்படுத்துவதற்கும், இந்த சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம் ஒரு தூண்டுதலாக செயல்படுகிறது.

பிளாஸ்டிக் பைகள் மளிகை கடைகள் முதல் சில்லறை விற்பனை நிறுவனங்கள் வரை நம் வாழ்வின் பல்வேறு அம்சங்களில் ஊடுருவியுள்ளன. இந்த பைகள் மட்குவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் தேவைப்படுவது மட்டுமல்லாமல், வன விலங்குகளுக்கு தீங்கு விளைவிப்பதுடன், கடல்கள் மற்றும் நிலப்பரப்புகளின் மாசுபாட்டிற்கு காரணமாகின்றன.

இது நமது சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு நீடித்த சேதத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை குறைப்பதற்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளை ஊக்குவிப்பதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைக்கு மாற்றாக சுற்றுச்சூழல் பாதுகாப்பினை கருதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் “மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வுவை தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக “சர்வதேக நெகிழி பை இல்லா தினமான ஜுலை 3-ஐ முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா, பொதுமக்கள், விற்பனையாளர்கள் மற்றும் பேருந்து பயணிகள் ஆகியோருக்கு மஞ்சப் பைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகராட்சி ஆணையர் சென்னு கிருஷ்ணன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரகுநாதன், துணை காவல் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *