திருவாரூர், ஜூலை.6- திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருவாரூர் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் இரா.முருகேசன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் ஆ.சுபாஷ், மாநில செயற்குழு உறுப்பினர் த.ஐயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து மாவட்டச் செயலாளர் ரெ.ஈவேரா பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, திருவாரூர் மாவட்டத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
உடனடியாக அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். தமிழக அரசு ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு தேவையில்லை என்பதை கொள்கை முடிவாக அறிவித்து, அதன்படி உச்ச நீதிமன்றத்தில் வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
தமிழக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய மேற்கொள்ளும் நடவடிக்கைகளை வரவேற்பதோடு, அதுபோல் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டுக்கான சீருடை வழங்கப்படாமல் உள்ளது. உடனடியாக சீருடை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக அரசின் மாநில கல்வி கொள்கைக்கான குழுவின் பரிந்துரைகளை முழுமையாக வெளியிட வேண்டும். அக்குழுவின் பரிந்துரையில் ஆசிரியர் தகுதித் தேர்வை கடுமையாக்க வேண்டும் என்ற பரிந்துரையை அமல்படுத்தக் கூடாது.
தமிழக அரசு வழங்கும் பள்ளி மற்றும் பராமரிப்பு மானியத்தை ஒரே தவணையாக வழங்க வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
அதுவரை பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் சிக்கன நாணய சங்கங்களில் பெறும் கடன் தொகைக்கு மேற்கொள்ளப்படும் காப்பீட்டை, குறைந்த பிரிமியம் உள்ள நிறுவனங்கள் மூலம் காப்பீடு செய்ய வேண்டும். கூட்டத்தில் இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் மா.பாலசுப்பிரமணியன், வட்டாரச் செயலாளர்கள் திருவாரூர் வேதமூர்த்தி, முத்துப்பேட்டை செல்வ சிதம்பரம், மன்னார்குடி பாலகிருஷ்ணன், நீடாமங்கலம் தமிழரசன், நன்னிலம் பிரகாஷ், கோட்டூர் பாரதி, குடவாசல் மணிகண்டன், திருத்துறைப்பூண்டி அரிகிருஷ்ணன், கொரடாச்சேரி சந்திரமோகன், மன்னார்குடி நகரச் செயலாளர் மார்ட்டின் வஜ்ரசிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.