திருச்சி-நாகை தேசிய நெடுஞ்சாலையில் வாகன விபத்துக்களை தடுக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை…
திருச்சி-நாகை தேசிய நெடுஞ்சாலை மார்க்க சாலை மிகவும் மோசமாக இருந்து வந்த நிலையில் இச்சாலை கடந்த இரண்டு ஆண்டுகாலமாக அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று நிறைவடைந்த நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
இத்தகைய திருச்சி-நாகை தேசிய நெடுஞ்சாலையானது சுற்றுலா பகுதிகளையும், அனைத்து மத வழிபாட்டு ஸ்தலங்களையும் இணைக்கும் முக்கிய சாலையாக இருந்து வருகிறது. இத்தகைய சாலை மார்க்கத்தில் அரசு பேருந்து சேவை முழுமையாக இயக்கப்படாத நிலையிலும் கூட தினசரி ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் தவிர இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பயணித்து வருகின்றன.
குறிப்பாக நீடாமங்கலம் அருகே உள்ள திருச்சி-நாகை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நார்த்தங்குடி என்ற பகுதியானது பல்வேறு வழித்தடங்களை இணைக்கும் முக்கிய சந்திப்பாக இருந்துவருகிறது.
அதாவது பட்டுக்கோட்டை-கும்பகோணம் வழியாக சென்னை உள்ளிட்ட தொலைதூர ஊர்களுக்கு செல்லவும், மற்றும் பல்வேறு முக்கிய கிராமங்களுக்கு செல்லும் மையமாக விளங்கும் நார்த்தங்குடி பகுதியினை கடக்கும்போது வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பல்வேறு விபத்துகளுக்கு உள்ளாகி உயிரழக்கும் நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.
முக்கிய சந்திப்பாக விளங்கும் நார்த்தங்குடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலைதுறை வாகன ஓட்டிகளை முறைப்படுத்திட எந்தவொரு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. இதனானல் நார்த்தங்குடி பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகள் தினசரி விபத்தில் சிக்கி உயிரழப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
கடந்த 4 மாதங்களில் மட்டு 30க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் ஏற்பட்ட விபத்தால் உயிரழந்துள்ளதோடு, 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உடனடியாக தேசிய நெடுஞ்சாலை துறை நார்த்தங்குடி பகுதியில் ரவுண்டானா அமைத்தும், பாதுகாப்பு தடுப்புகளை அமைத்தும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் உயிருக்கும் உடைமைக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.