ராஜபாளையம் நகராட்சி சுமார் 2 லட்சம் மக்கள் தொகையுடன் வளர்ந்து வரும் நகரம். சிறு, குறு தொழிற்கூடங்கள் மற்றும் நூற்பாலைகள் மிகுந்த பகுதி. நகராட்சியில் பாதாள சாக்கடை, தாமிரபரணி குடிநீர் நல திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.
இதனால் சாலைகளில் தோண்டப்பட்ட குழிகளால் சாலை சிதிலமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலை நீடிக்கிறது. டி.பி. மில்ஸ் சாலையில் பாலம் வேலை நடைபெறுவதால் ஒரு வழிப் பாதையாக தென்காசி கொல்லம் சாலைமட்டுமே இருந்து வருகிறது.
இதனால் நாளும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாக ஓட்டிகள், பொதுமக்கள் சொல்லணாத்துயரத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் போக்குவரத்து மிகுந்த காந்தி சிலை, கர்ட்டன் மார்க்கெட், தென்காசி சாலை, காந்தி கலைமன்றம், சங்கரன்கோவில் முக்கு என பல இடங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக மின் கம்பங்களில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.
அவை குறிப்பிட்ட நாட்களை கடந்தும் அகற்றப்படாமல் உள்ளன. மேலும், நெடுஞ்சாலையோரங்களில், ஆங்காங்கே பெரிய அளவில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இவற்றால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி, விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், பொது இடங்களில் கட்-அவுட், பிளக்ஸ் பேனர் வைக்கவும், சுவரொட்டி ஒட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளைப் பின்பற்றாமல் வைக்கப்படும் பேனர்களால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. உயர்நீதிமன்ற ஆணைப்படி பேனர் தடை சட்டத்தை நடைமுறைப்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.