எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே வழுதலைக்குடி கிராமத்தில் குடிநீர் வேண்டி கிராம மக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வழுதலைக்குடி கிராமம் உள்ளது இக்கிராமத்தில் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறியதால் திருமுல்லைவாசல் ஊராட்சியில் இருந்து கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில். கடந்த ஒரு வாரங்களுக்கு மேலாக சரியான முறையில் குடிநீர் வராததாலும், வருகின்ற குடிநீரும் அழுக்காக காவி நிறமாக வருவதாலும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் வேலைக்கு செல்லுபவர்கள் அவதி அடைந்து வந்தனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் தெரிவித்தும் கடந்த ஒரு வார காலமாக குடிநீர் வராததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் வழுதலைக்குடி கிராமத்தில் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்து பேச்சு வார்த்தைக்கு வந்த சீர்காழி காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலை மறியல் நடைபெற்ற இடத்திற்கு வந்த கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் உமா சங்கர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.
பேச்சுவார்த்தையில் உடனடியாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் அடிப்படையில் சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
பொதுமக்கள் இந்த சாலை மறியலால் சீர்காழி- திருமுல்லைவாசல் சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.