பெரம்பலூரில் பகுதி நேர கிராமிய கலை பயிற்சி மையம் திறப்பு விழா.

பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியில், தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் பகுதி நேர கிராமிய கலை பயிற்சி மையத்தை மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு அவர்கள் தலைமையில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு, கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் பகுதிநேர கிராமிய கலை பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளது.
இப்பயிற்சிக்கு 2024-2025 ஆம்கல்வி ஆண்டிற்கான மாணாக்கர் சேர்க்கை ஜூலை 1ஆம் தேதி முதல் நடைபெற்றது.
இக்கிராமிய கலை பயிற்சியில் கரகாட்டம் ,தப்பாட்டம், சிலம்பாட்டம் மற்றும் நாடகம் ஆகிய கலைகளில் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு வகுப்புகள் நடைபெறும்.
வெள்ளி மற்றும் சனிகிழமைகளில் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்திலேயே வகுப்புகள் நடைபெறும்.
இக்கலைப் பயிற்சியானது ஓராண்டு கால சான்றிதழ் பயிற்சியாகும். ஒர் ஆண்டு முடிவில் தேர்வு நடத்தப்பட்டு பல்கலைக்கழக சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியில் சேர்வதற்கு தேவையான அடிப்படை கல்வித்தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி ஆகும். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களும் வகுப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள், ஆனால் தேர்வுக்கு செல்ல முடியாது. 17 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இப்பயிற்சி வகுப்புகளில் சேரலாம். இப்பயிற்சிக்கான கல்விக்கட்டணம் வருடத்திற்கு ரூ.500 ஆகும்.
கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் வழங்கப்பட்டுள்ள இந்த பயிற்சி வகுப்பில் இதுவரை 75 நபர்கள் சேர்ந்துள்ளார்கள்.
நடைபெற்ற தொடக்க விழாவில், பயிற்சியில சேர்ந்துள்ள மாணவ மாணவிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களும், சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
மேலும், குரலிசை, கருவியிசை, ஓவியம் உள்ளிட்ட இளையோர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக ரூ.6,000ம், இரண்டாம் பரிசாக ரூ.4,500ம், மூன்றாம் பரிசாக ரூ.3,000ம் காசோலைகளாக வழங்கினார்கள்.
இந்நிகழ்வில், அரசு இசைப்பள்ளி முதல்வர் முனைவர்.ராஜேஸ்வரி, பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன், அரசு இசைப்பள்ளி ஆசிரியர் நடராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.