பெரம்பலூர் அருகே ஏரியில் சட்ட விரோதமாக அனுமதி இன்றி கிராவல் மண் அள்ளிக் கொண்டிருந்த இரண்டு டிப்பர் லாரிகளையும் மண் அள்ள பயன்படுத்திய ஜேசிபி எந்திரத்தையும் சார் ஆட்சியர் கோகுல் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் உள்ள நாரணமங்கலம் To பாடாலூர் வரை தேசிய நெடுஞ்சாலைக்கு பாலம் அமைக்கும் பணிக்கு கிராவல் கொட்டுவதற்காக பெரிய ஏரியில் ஆளும் திமுகவினர் மற்றும் எஸ்.ஆர் என்ற தனியார் நிறுவனத்தின் ஆதரவுடன் சட்டவிரோதமாக அனுமதி இன்றி தொடர்ந்து கிராவல் மண் வெட்டி கடத்தப்படுவதாக பெரம்பலூர் சார் ஆட்சியர் கோகுலுக்கு தகவல் வந்தது.
இதனை அடுத்து சார் ஆட்சியர் கோகுல் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்ததில் அந்த ஏரியில் ஒரு ஜேசிபி இயந்திரத்தை கொண்டு கிராவல் மண்களை வெட்டி எடுத்து இரண்டு லாரிகளில் நிரப்பி கொண்டிருப்பது தெரிய வந்தது. சார் ஆட்சியர் கண்டதும் லாரி மற்றும் ஜேசிபி ஓட்டுநர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதனை அடுத்து மண் அல்ல பயன்படுத்திய ஜேசிபி எந்திரம் மற்றும் இரண்டு டிப்பர் லாரிகளையும் பறிமுதல் செய்த சார் ஆட்சியர் கோகுல் அவற்றை பாடாலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
தொடர்பாக வழக்கு பதிவு செய்த பாடாலூர் போலீசார் தப்பி ஓடிய ஓட்டுநர்களை தேடி வருகின்றனர்.
ஆளும் திமுக ஆதரவுடன் ஒரு கும்பல் தொடர்ந்து இரவு முழுவதும் பத்துக்கு மேற்பட்ட டிப்பர் லாரிகளில் கிராவல் மண் வெட்டி எடுத்து வந்ததை துணிச்சலுடன் பிடித்து, சார்ஆட்சியர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ள சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.