கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த சின்ன பருகூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். கல் உடைக்கும் தொழிலாளியான இவருக்கு உஷா (37) என்ற மனைவியும் நிவேதா (17) ஷர்மிளா (13) ஆகிய இரு மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகள் நிவேதா பன்னிரண்டாம் வகுப்பு இளைய மகள் ஷர்மிளா எட்டாம் வகுப்பு பர்கூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரமேஷுக்கு போதிய வருவாய் இல்லாததால் குடும்பத்தினர் கடன் பிரச்சனையில் சிரமப்பட்டு வந்துள்ளனர். குறிப்பாக சங்கத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் பணம் கட்ட வேண்டிய நிலையில் அதற்காக பல்வேறு இடங்களில் கேட்டுள்ளனர். ஆனால் அந்த தொகை கிடைக்காத சூழலில் ரமேஷ் இன்று காலை பெங்களூரில் உள்ள தனது தம்பி கணேசன் என்பவரை தொடர்பு கொண்டு 5 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளார். அதேசமயம் தொலைபேசியில் பேசும் பொழுது வீட்டில் அதிக அளவு கூச்சல் சத்தம் இருந்ததால் கணேசன் உடனடியாக அவரது தந்தை காத்தவராயனை தொடர்பு கொண்டு அண்ணனின் வீட்டில் சென்று பார்க்குமாறு தெரிவித்துள்ளார். அப்போது காத்தவராயன் ரமேஷ் தொடர்பு கொண்டு என்ன பிரச்சனை என கேட்டுள்ளார் அதற்கு ரமேஷ் நானே சாக தான் போகிறேன் வந்து என் சடலத்தை பாருங்கள் என்று சொல்லிவிட்டு போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.
பின்னர் ரமேஷின் தந்தை காத்தவராயன் வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது வீடு பூட்டப்பட்டிருந்தது. இதை எடுத்து வீட்டின் ஜன்னல் வழியே சென்று பார்க்கையில் உஷா மகள்கள் நிவேதா ஷர்மிளா ஆகிய மூவரும் தூக்கில் தொங்கியவாறு சடலமாக இருந்துள்ளனர்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த காத்தவராயன் உடனடியாக பர்கூர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பர்கூர் போலீசார் உடனடியாக தூக்கில் தொங்கிய உஷா நிவேதா ஷர்மிளா மூவரின் உடல்களையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை பர்கூர் டி.எஸ்.பி பிரித்விராஜ் சௌகான் நேரில் விசாரணை மேற்கொண்டனர். கடன் பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் இரண்டு மகள்கள் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை அவர்களிடம் கேட்ட பொழுது முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட வாய்தாறு மனைவி மற்றும் இரண்டு பள்ளி குழந்தைகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது மேலும் அவரது கணவர் ரமேஷ் அவர்களும் தற்பொழுது செல்போன் சுவிட்ச் ஆப் செய்துள்ளார் இது குறித்து விரைந்து அவரை கண்டுபிடித்து விசாரணை செய்து தற்கொலைக்கான காரணம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தெரிவித்தார்.