‘பருத்தி – எதிர்காலத்துக்கான நிலையான நூற்பொருள் என்ற கருப்பொருளில் 2 நாட்கள் நடைபெறுகிறது
கோவையை தலைமையாக கொண்டு செயல்படும் இந்தியன் காட்டன் பெடரேஷன் (ICF) மற்றும் பஞ்சாப்பை தலைமையாக கொண்டு இயங்கும் இந்தியன் காட்டன் அசோசியேஷன் லிமிடெட் (ICAL) ஆகிய அமைப்புகள் இனைந்து 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தும் அகில இந்திய பருத்தி மாநாட்டின் 6 ஆவது பதிப்பு கோவையில் ரெசிடென்சி ஹோட்டலில் தொடங்கியது.
‘பருத்தி – எதிர்காலத்துக்கான நிலையான நூற்பொருள்’ எனும் கருவில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இத்துடன் உலக அரங்கில் பருத்தியின் நிலை மற்றும் பருத்தி சார்ந்த தொழில்துறைக்கு உள்ள சவால்கள் குறித்தும் இந்த நிகழ்வில் விவாதிக்கப்பட்டது.
மொத்தம் 7 அமர்வுகளில் வெவ்வேறு முக்கிய தலைப்புகளில் தொழில்துறை வல்லுநர்கள், பல்வேறு பருத்தி சார்ந்த சங்கங்கள்/அமைப்புகளின் முக்கிய உறுப்பினர்கள், ஆராய்ச்சி நிறுவனங்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்தியா முழுவதும் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட பருத்தி துறை சார்ந்த பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றார்கள். மேலும் இந்த நிகழ்வு மூலமாக இந்த துறைக்கு மாநில,மத்திய அரசுகளிடம் இருந்து தேவைப்படும் உதவிகளை குறித்து விவாதித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சைமா தலைவர் எஸ்.கே.சுந்தரராமன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். மாநாட்டுத் தலைவர் பி.நடராஜ் அவர்கள் வரவேற்புரையாற்றினார், இந்த தேசிய அளவிலான மாநாடு, பருத்தியின் திறனை நிலையான இழையாகக் கண்டறிய பங்கேற்பாளர்களுக்கு உதவும் என்று கருத்துத் தெரிவித்தார். இந்த மாநாடு பருத்தியின் பல்வேறு பரிமாணங்களை அதன் நிலையான அம்சங்களை வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
“நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் உணர்வின் இந்த சகாப்தத்தில், பருத்தியின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்த முடியாது. உலகளாவிய கவனம் சூழல் நட்பு, நிலையான நடைமுறைகளை நோக்கி நகர்கிறது. எனவே பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்திற்கு பங்களிக்க பருத்தியின் திறனைப் பயன்படுத்துவது கட்டாயமாகும் என பி.நடராஜ் கூறினார்.
தொடக்க நிகழ்வில் , கே.ஜி. குழுமத்தின் தலைவர் திரு. கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்களுக்கும், எல்.எஸ். மில்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு. மணிவண்ணன் அவர்களுக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. சைமா தலைவர் எஸ்.கே.சுந்தரராமன், ஐசிஎப் தலைவர் துளசிதரன் மற்றும் மாநாட்டின் தலைவர் நடராஜ் ஆகியோர் விருது பெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தனர்.
செல்வாக்கு மிக்க ஆளுமைகளான அதுல் பி ஆஷர், அசோக் டி தாகா மற்றும் கோபால் புராடியா ஆகியோர் வணிகத் தலைவர் விருதுகளுடன் கௌரவிக்கப்பட்டனர்.