விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிக்கு அரசு கலைக்கல்லூரி அமைக்க நீண்ட நாள் கோரிக்கை விடுத்ததின் பேரில் ரெட்டியபட்டி விலக்கு பகுதியில் அரசு கலைக்கல்லூரி கட்டப்பட்டு அங்கு மாணவ மாணவியர் படித்துக் கொண்டிருக்கிறார்கள். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து அரசு பேருந்து காலையில் அந்த அரசு கலைக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த பேருந்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் ஒரே சமயத்தில் பயணம் செய்ய வேண்டிதுள்ளது. மேலும் பேருந்தை ரெட்டியபட்டி விலக்கிலேயே மாணவ மாணவியரை இறக்கி விடுவதால் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கல்லூரிக்கு மாணவ மாணவியர் நடந்தே செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே மாணவ மாணவியர் இன்று காலை காந்தி சிலை ரவுண்டானா அருகே அரசு மருத்துவமனை எதிரே மாணவ மாணவியர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவி வாசுகி கல்லூரி மாணவர் ஆராவமுதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. தகவல் கிடைத்தவுடன் சார்பு ஆய்வாளர்கள் கமலக்கண்ணன், கவுதம் விஜய் தலைமையில் போலீசார் விரைந்து வந்து மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக ஓரத்திற்கு கொண்டு வந்து போக்குவரத்தை சரி செய்தனர். அதன் பின்னர் போக்குவரத்து டிப்போ மேலாளர் மாரியப்பன் வரவழைக்கப்பட்டு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பள்ளி கல்லூரி செயல்படும் நேரத்தில் கூடுதலாக பேருந்துகள் கிடைப்பது மிகவும் அரிது எனவும், தற்போதைக்கு நடைபெறும் ஒரே பேருந்தில் ஏறி பயணம் செய்யவும் விரைவில் அரசிடம் பேசி கூடுதலான பேருந்து கிடைப்பதற்கு வழி செய்வதாக உறுதி கூறினார். அந்த உறுதியை ஏற்று கல்லூரி மாணவ மாணவியர் அனைவரும் காலை 9-15 மணிக்கு மேல் கூடுதலாக ஒரு பேருந்து விடப்பட்டு அந்த பேருந்தில் ஏறி கல்லூரிக்கு பயணம் ஆனார்கள். மேலும் இதை சாக்காக வைத்து 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கல்லூரியை புறக்கணித்து வீட்டிற்கு சென்று விட்டனர்.