போச்சம்பள்ளி அடுத்த தாதம்பட்டி கிராமத்தில் இரு தரப்பினர் மோதல் மற்றும் கத்திக்குத்து சம்பவம் – மூன்றாவது நபரை கைது செய்ய முயன்றபோது உறவினர்கள் சாலை மறியல்
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த தாதம்பட்டி கிராமத்தில் உள்ள முன்னாள் ஊராட்சி தலைவர் ரங்கதுரை (47) தரப்பினருக்கும், சௌந்திரபாண்டியன் (45) தரப்பினருக்கும் கடந்த 08ம் தேதி ஏரியில் மண் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் கத்தித்குத்து மோதல் ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த இரு தரப்பினரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கடந்த 09ம் தேதி தமிழரசன் (42) மற்றும் நவீன்(42) ஆகிய இருவரையும் போச்சம்பள்ளி போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் காவேரிப்பட்டிணத்தில் தனியார் மரு்த்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சௌந்திரபாண்டியனை போலீசார் கைது செய்ய முயன்ற போது, சௌந்திரபாண்டியனின் உறவினர்கள் 20ற்கும் மேற்பட்டோர் போச்சம்பள்ளி காவல் நிலையம் முன்பு தருமபுரி-திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். உறவினர் ஒருவர் பெட்ரோல் கேனை எடுத்து ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தபோது அங்கிருந்த காவலர்கள் தடுத்து பெட்ரோல் கேனை பிடிங்கி வைத்தனர். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற சாலை மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சௌந்திரபாண்டியனுக்கு நுரையீரலில் இரத்தகட்டி இருப்பதால் மேலும் சிகிச்சை பெற வேண்டியிருக்கின்ற காரணத்தால், மேல் சிகிச்சைக்காக மருத்துவர் பரிந்துரை செய்த நிலையில் கைது நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்படுவதால் காவல் ஆய்வாளர் நாகலட்சுமி தெரிவித்த நிலையில், சாலை மறியலை கைவிட்டு உறவினர்கள் கலைந்து சென்றனர்.