கும்பகோணம் அருகே தமிழகத்தில் முதன்முறையாக பெண்களே யாகபூஜைகள் நடத்தி தமிழ் முறைப்படி திருபுவனம் ஆதிசக்தி ஞானபீடம் கும்பாபிஷேகம்……

ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம். …

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனத்தில்
இந்திய பண்பாட்டு அமைப்பு அறக்கட்டளை உலகளாவிய ஆசீவக தமிழ்ச்சித்தர் வழிபாட்டு மையம் மற்றும் சித்தவித்தை ஞானபீடம் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் பச்சை ஆடையுடன் 60 பெண்களால் நடத்தப்பட்ட யாகசாலை பூஜைகளுடன் இன்று நடைபெற்றது. திருபுவனம், இந்திரா நகரில் அமைந்துள்ள சித்தர்களின் தலைவி ஆதிசக்தி ஞானபீடம் மற்றும் பதினெண் சித்தர்கள், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன், ஸ்ரீவாலைக்குமாரி, ஸ்ரீலஸ்ரீமூட்டைசுவாமிகள் அருள்கூடம் ஆகிய திருமேனிகளின் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் இன்று ஆசீவகத் தமிழ் சித்தர் கண்ணன் அடிகள் மற்றும் கோவை காமாட்சிபுரம் ஆதீனம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

கடந்த 04ம் தேதி மாலை முதல் தொடங்கிய யாக சாலை பூஜைகள் நான்கு கால பூஜைகளும் தமிழ் மந்திரங்கள் ஓதி பச்சை ஆடை உடுத்தி 60 பெண்களே நடத்தினர்.

தொடர்ந்து உழவுத் தொழிலின் குறியீடாம் பச்சை ஆடை உடுத்தி பெண்கள் கோயிலின் கருவறைக்கு சென்று அவர்களது திருக்கரங்களால் தெய்வத் திருமேனிகளுக்கு அபிஷேகம் செய்தனர்.

இங்கு சித்தர்கள் போற்றும் பஞ்ச பூதங்களை குறிக்கும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் வடிவங்கள் வேள்வி குண்டங்களாக அமைக்கப்பட்டு இருந்தன. இங்குசாதி, சமய, இன பேதமின்றி அனைவரும் கருவறைக்குள் செல்ல அனுமதியும், தமிழ் மந்திரங்கள் ஓத அனுமதியும் ஆசீவகத் தமிழ் சித்தர் கண்ணன் அடிகளால் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலேயே முதன்முறையாக பெண்களே யாகசாலை பூஜைகள் நடத்தி கலசத்திற்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தினர்.

இதில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *