திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தின் தலைசிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பாடைக் காவடி திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செ ல்வார்கள்.
ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று பாடை காவடி, பால்குடம் உள்ளிட்டவை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். இந்நிலையில் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி ஆவணி கடை ஞாயிறு அன்று ஆலயத்திற்கு அருகில் உள்ள புனித குளத்தில்அம்மன் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்,
அதனை முன்னிட்டு தெப்பக்குளத்தில் உள்ள பழைய தண்ணீர் அகற்றப்பட்ட நிலையில் முதல் கட்டமாக மூன்று மின் மோட்டார்கள் மூலம் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆவணி கடை ஞாயிறு அன்று காலை 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்,
அதனைத் தொடர்ந்து மதியம் அம்மன் வீதி உலா காட்சி நடைபெறுகிறது. இதனையடுத்து இரவு எட்டு மணிக்கு ஆலயத்திற்கு அருகில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்பத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் ஆ. ரமேஷ் ,தக்கார்/ஆய்வர் க.மும்மூர்த்தி, அலுவலக மேலாளர் தீ. சீனிவாசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.