போச்சம்பள்ளி அருகே காட்டு பன்றிகளை பிடிக்க வைக்கப்பட்ட வாய்வெடியை கடித்த பசுமாடு – வெடித்து சிதறிய வாய்ப்பகுதியுடன் உயிருக்கு போராடி வருகிறது

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த ஓலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் (39). விவசாயியான இவர் 5 மாடுகளை வைத்து பராமரித்து வருகிறார். சம்பத்தின் தந்தை சின்னசாமி (60) வழக்கம்போல் 5 மாடுகளை பிடித்துக்கொண்டு அவர்களுக்கு சொந்தமான மாந்தோப்பில் மாடு மேய்க்க வந்துள்ளார். அப்போது அதிலிருந்த ஒரு மாடு மேய்ந்துக்கொண்டிருந்த போது உருண்டையான ஒன்றை வாயில் கவ்விக்கொண்டு மெல்லத்துவங்கியது.

புற்களை மேயாமல் வாயில் என்ன வைத்துள்ளது என மாட்டின் அருகே வருவதற்குள், அது பலத்த சப்தத்துடன் வெடித்துள்ளது. இதனால் மாட்டின் வாய் பகுதி முழுவதும் வெடித்து சிதறி விடுகிறது. வெடி சப்தத்தில் தூக்கி வீசப்பட்ட சின்னசாமி அங்கிருந்து எழுந்து ஓடி மகனிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.

விபரம் அறிந்து அங்கு வந்த கிராம மக்கள் வாய் சிதறிய நிலையில் ரத்த வெள்ளத்தில் இருந்த பசு மாட்டின் நிலைமையை கண்டு கண்ணீர் வடித்தனர். சென்றாய மலை அருகே உள்ள விவசாய நிலப்பகுதி என்பதால் இரவு நேரங்களில் காட்டு பன்றிகளை பிடிக்க அடையாளம் தெரியாத நபர்களால் வைக்கப்பட்ட வெடி என கிராம மக்கள் தெரிவித்தனர்.

கடந்த 6 மாதத்திற்கு முன்பு இதேபோல் வளர்ப்பு நாய் கடித்ததில் வாய் வெடித்து நாய் இறந்ததாகவும், அதேபோல் விவசாய நிலத்தில் டிராக்டர் கொண்டு உழுது போது வெடித்ததில் டிராக்டரின் ஒரு பகுதி வெடித்து சிதறியதாகவும் கிராம மக்கள் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்.

இன்னும் விவசாய நிலத்தில் ஆங்காங்கே இதுபோன்ற வெடிகள் வைக்கப்பட்டிருக்கலாம் என அதிர்ச்சி தகவலையும் கொடுத்தனர். நிலத்தின் உரிமையாளர்கள் பத்திரமாக செயல்பட வேண்டுமெனவும்,  இதுபோன்ற வெடி வைப்பது இப்பகுதியில் தொடர்கதையாகி வருவதாகவும், வெடி வைப்பவர்களை காவல் துறையினர் கண்டு பிடித்து கைது செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர். இச்சம்பவம் குறித்து கல்லாவி போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னிவெடி போன்று செயல்படும் இந்த வெடிக்கு வாய் வெடி என கிராம மக்கள் அழைக்கின்றனர். காட்டுப்பகுதியில் காட்டு பன்றிகளை பிடிப்பதற்காக இந்த வாய்வெடியை பயன்படுத்துகன்றனர். சிலவகையான மாவு மற்றும் மாட்டு கொழுப்புகளால் மூடப்பட்டிருக்கும் இந்த வெடியை வாசனை கொண்டு வரும் விலங்குகள் கடிக்கும்போது வெடிக்கும் தன்மை கொண்டது.  நகரப்பகுதிகளில் இந்த வெடி சகஜமாக கிடைத்தாலும், காவல் துறையினர் கண்டுகொள்வதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *