திருவாரூர், செப்.10- பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை சரி செய்து மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை 1.1.2006 முதல் வழங்க வேண்டும். தமிழக அரசால் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும். ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற தகுதித் தேர்வு தேவையில்லை என்பதை தமிழ்நாடு அரசு கொள்கை முடிவாக அறிவித்து, தகுதித் தேர்வு சார்பான நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடித்து, பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
உயர்கல்வி பயின்று பின்னேற்ப்பு கோரியுள்ள ஆசிரியர்களுக்கு அதற்கான ஆணை வழங்க வேண்டும். எண்ணும் எழுத்தும் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும். ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளுக்கு ஆசிரியர்களையே பயிற்சி வழங்குவோராக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். உயர்கல்வி பயின்ற ஆசிரியர்களுக்கு பழைய முறையில் ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும்.
தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்கி பணி வரன்முறை செய்ய வேண்டும். தொடக்கக் கல்வித்துறையில் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும். தொடக்கக்கல்வித் துறையில் பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கக் கூடிய வகையில் உள்ள மாநில முன்னுரிமை என்ற அரசாணை 243ஐ ரத்து செய்ய வேண்டும்.
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ரூ 5 400 தர ஊதியம் அனுமதிக்க வேண்டும். பி.லிட் படித்து பதவி உயர்வு பெற்றுள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். இவைகள் உள்ளிட்ட 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கல்வித்துறை ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோஜாக் சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது. வேலை நிறுத்தத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 850 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணி புரியும் 3200 ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை.
ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.