மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, தலைமையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர் களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, தெரிவித்ததாவது:-
வடகிழக்கு பருவமழைக்காலம் தொடங்க உள்ளதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் பருவமழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அறிவுரை வழங்கியுள்ளது. மதுரை மாவட்டத்தில் கடந்த காலங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட தாழ்வான பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மீட்பு பணிகள் தொடர்பாக மாவட்ட அளவில் துறை ரீதியான சிறப்பு குழுக்கள் தயார் நிலையில் வைத்திட வேண்டும். மழைக்காலத்தில் எளிதில் மழை நீர் தேங்கக் கூடிய தாழ்வான பகுதிகளில் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு அப்பகுதியில் உள்ள திருமண மண்டபங்கள், கல்வி நிலையங்கள், சமுதாய கூடங்கள் போன்றவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும்.

கண்மாய்கள் மற்றும் இதர நீர் நிலைகளின் நீர் வழித்தடங்களை சுத்தமாக பராமரிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்திடவும், ஆக்கிரமிப்புகள் இருக்கும் பட்சத்தில் உடனடியாக அகற்றிட பொதுப்பணித்துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கண்மாய் ஊரணிகளில் உடைப்பு ஏற்படும் பச்சத்தில் அவற்றை எதிர்கொள்ள ஏதுவாக போதிய மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்க வேண்டும்.

கனமழை நேரத்தில் போக்குவரத்து பாதிக்கப்படாத வகையில் சாலைகளின் குறுக்கே விழும் மரங்களை உடனடியாக அகற்றிட தேவையான நவீன உபகரணங்களை நெடுஞ்சாலைத் துறையினர் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மின் கம்பங்கள் சாய்தல் அல்லது மின்கம்பிகள் அறுந்து விழுதல்
போன்ற நிகழ்வுகளை உடனடியாக சரி செய்ய மின்சாரத்துறை அலுவலர்கள் தயார் நிலையில் இருந்திட வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரச ஆரம்ப சுகாதார நிலையங்களில்
காய்ச்சல் உள்ளிட்ட நோய் தடுப்பு மருந்துகளை போதிய அளவில் தயார் நிலையில் வைத்திட வேண்டும்.
அதேபோல கால்நடைகளுக்கான நோய் தடுப்பு மருந்துகள் போதிய அளவில் கையிருப்பு வைக்கப் பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். கனமழையால் பயிர் பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில்
அவற்றை உடனடியாக கணக்கீடு செய்வதற்கான அலுவலர் குழுக்களை தயார் நிலையில் வைத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா, தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *