விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தென் திருப்பதி என அழைக்கப்படும் திருவண்ணாமலையில் புரட்டாசி சனிவார திருவிழா துவங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகில் ஒரு சிறு குன்றின் மேல் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. தென்திருப்பதி என பக்தர்களால் அழைக்கப்படும் இங்கு புரட்டாசி மாத 5 சனிக்கிழமைகளிலும் கருட சேவை சிறப்பாக நடைபெறும்.
இங்கு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கருட சேவையை கண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு புரட்டாசி சனிவார கருட சேவை துவங்கியது. அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அருள்மிகு சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து ஆகம விதிமுறைப்படி பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு கால சாந்தி பூஜை, நண்பகல்12-30 மணிக்கு உச்சிக்கால பூஜை, இரவு 8 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பிற்பகல் 4 மணிக்கு உற்சவர் மலையைச் சுற்றி கிரிவலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. புரட்டாசி சனிவார விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு பல்வேறு ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்து வசதி, மருத்துவ வசதி, குடிநீர் வசதி, அன்னதானம் போன்ற வசதிகளும் பக்தர்கள் சிரமமின்றி மலையேறி சீனிவாச பெருமாளை தரிசனம் செய்ய சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டது. புரட்டாசி சனிவார திருவிழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். வெங்கட்ராமராஜா மற்றும் அறங்காவலர்கள் மதுரை அறநிலையத்துறை இணை ஆணையர் க.செல்லதுரை, விருதுநகர் உதவி ஆணையர் து. வளர்மதி, கோவில் செயல் அலுவலர் சௌ.சக்கரை அம்மாள், ஆய்வாளர் செ. முத்து மணிகண்டன் மற்றும் கோயில் அலுவலர்களூம் திருக்கோவில் பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி ராஜா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது.