பெரம்பலூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் வனத்துறையின் சார்பில் பசுமை தமிழ்நாடு நாளினை முன்னிட்டு நடத்தப்பட்ட 1000 மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.

மேலும், மாணவ மாணவிகளுக்கும் மரக்கன்று நட்டு வளர்ப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், மரக்கன்றுகளை நட்டு பாதுகாப்பாக வளர்க்கும் எண்ணத்தை ஊக்குவிக்கும் வகையிலும் அப்பள்ளியில் பயின்ற மாணவிகைளையும் மரக்கன்று நட்டு வைக்க மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தியதன் அடிப்படையில், மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டின் வனப்பரப்பினை 33 சதவீதமாக உயர்த்துவதற்கு ”பசுமை தமிழ்நாடு” என்ற இயக்கத்தினை 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்கி வைத்தார்கள்.

இதனால் இந்நாளினை பசுமை தமிழ்நாடு தினமாக அறிவித்து, ஒவ்வொரு ஆண்டும் மரக்கன்றுகள் நடப்பட்டு சுற்றுச்சூழலை பேணி காத்திடும் விதமாக பசுமை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் இந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் 1,000 மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டு, இன்று பெரம்பலூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், எசனை, அம்மாபாளையம், ஒதியம், குரும்பலூர், ஆலம்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளிலும், பெரம்பலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, தொண்டபாடி மாரியம்மன் கோவில் அருகில் உள்ளிட்ட இடங்களில் மாவட்ட வனத்துறையின் சார்பில் புங்கன், வேம்பு, மகோகனி, பாதாம், நீர்மருது உள்ளிட்ட பல்வேறு வகையான 1000 மரக்கன்றுகள் நடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மாவட்ட வன அலுவலர் திரு.சுகனேஷ், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி மீனா அண்ணாதுரை, நகர்மன்ற துணைத்தலைவர் திரு.ஆதவன், வனச்சரகர்கள் திரு.பழனிக்குமார், திரு.சுதாகர் மற்றம் பள்ளியின் தலைமைஆசிரியர், ஆசிரியர்கள், மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *