வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர்
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையம் வரையிலான வட்ட பேருந்து சேவையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று தொடங்கி வைத்தார்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் வட்ட பேருந்து சேவையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது வட்ட பேருந்து சேவையின் வழித்தடங்கள் பற்றியும், பேருந்து நிறுத்தங்கள் பற்றியும் அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார்.அதாவது அதிகாரிகள் கூறும் போது, இந்த வட்ட பேருந்து சத்திரப் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு மேல புலிவார்டு ரோடு, மார்க்கெட், பாலக்கரை, ரயில் நிலையம் வழியாக மத்திய பேருந்து நிலையம் சென்றடைந்து, மீண்டும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம், அரசு மருத்துவமனை, உறையூர் வழியாக சத்திரம் பேருந்து நிலையம் சென்றடையும். இதுபோல் காலை முதல் இரவு வரை வட்ட பேருந்து சேவை பயணிகளுக்காக வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வின் போது பேசிய அமைச்சர், தற்போது கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு போக்குவரத்து கோட்டம் இயங்கி வருகிறது. சென்னை, மதுரை, கோவைக்கு அடுத்து படியாக திருச்சி பெரிய நகரமாக இருக்கிறது.
ஆகவே திருச்சியை தலைமையிடமாக கொண்டு போக்குவரத்து கோட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் பேசி ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் பேசினார்.இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதிப் குமார்.மண்டல தலைவர் மதிவாணன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருச்சி மண்டல பொது மேலாளர் அ.முத்துகிருஷ்ணன், துணை மேலாளர் ( வணிகம்) ஆர்.சாமிநாதன்,கோட்ட மேலாளர் புகழேந்திராஜ், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.