காடையாம்பட்டியை பவானி நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஊர்வலமாக சென்று திடீர் சாலை மறியல்.
அரைமணிநேரம் பவானி-சத்தியமங்கலம் மெயின் ரோட்டில் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு.
ஆண்டிகுளம் கிராமசபை கூட்டத்தில் கருப்பு கொடியுடன் பொதுமக்கள் பங்கேற்பு.
ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆண்டி குளம் ஊராட்சி காடையாம்பட்டி பகுதி. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இதற்கிடையே அருகில் உள்ள பவானி நகராட்சியோடு ஆண்டிகுளம் மற்றும் குருப்பநாயக்கன் பாளையம் ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதன் காரணமாக காடையாம்பட்டி கிராம மக்கள் ஏற்கனவே ஆண்டிகுளம் ஊராட்சியை பவானி நகராட்சி உடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காடையாம்பட்டி பகுதி பொதுமக்கள் கருப்புக் கொடி ஏந்தியும் கருப்பு பட்டை அணிந்தும் காடையாம்பட்டி மாரியம்மன் கோவிலில் இருந்து பவானி- சத்தியமங்கலம் சாலை அந்தியூர் பிரிவு ரோடு வரை ஊர்மலம் ஆக வந்தனர். பின்பு கிராம மக்கள் காடையாம்பட்டி பிரிவு பகுதியில் அந்தியூர்- -பவானி- சத்தியமங்கலம் பிரதான சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுமார் 30 நிமிடம் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் ஆண்டி குளம் ஊராட்சியை பவானி நகராட்சி உடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
இதனால் பவானி, அந்தியூர், சத்தியமங்கலம் செல்லும் ரோட்டில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து கருப்புக்கொடியுடன் சென்று ஆண்டிகுளம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று ஆண்டி குளம் ஊராட்சியை பவானி நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு வழங்கினர்.
இது குறித்து கிராம மக்கள் தெரிவிக்கையில் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கும் போது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், சொத்து வரி, வீட்டு வரி உயர்வு ஏற்படும் மற்றும் ஊராட்சியில் கிடைக்க கூடிய சலுகைகள் அனைத்தும் தடைபடும், எனவே தங்களது வாழ்வாதாரமான 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் பறிபோகும் சூழல் உள்ளதுன் காரணமாக ஆண்டிகுளம் ஊராட்சியை நகராட்சி உடன் இணைக்க கூடாது என வலியுறுத்தினார்