சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியை பொது தொகுதியாக்க வேண்டும்-தமிழக ஆளுநரிடம் செங்குந்தர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற போதை விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர் எம் ரவி வருகை தந்தார். சங்கரன்கோவிலுக்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்க மாநில துணை தலைவர் மாரிமுத்து தலைமையில் செங்குந்தர் முன்னேற்ற சங்கத்தினர் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நெசவுத் தொழிலின் அடிப்படை ஆதாரமாக விளங்கும் நூலின் ஜிஎஸ்டி வரி அதிகமாக இருப்பதால் அதனை குறைத்து அரசு மானிய விலையில் நூல்களை வழங்கி நெசவாளர்களின் உற்பத்தி நிலையினை உயர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சங்கரன்கோவிலை சுற்றி 10 ஆயிரத்திற்கும் அதிகமான விசைத்தறிக்கூடங்கள் இயங்குவதால் நெசவாளர்களின் உற்பத்தி வளர்ச்சிக்காகவும் தொழில் மேம்பாட்டிற்காகவும் சங்கரன்கோவிலில் ஜவுளி பூங்கா ஏற்படுத்த வேண்டும்.
ஜவுளி உற்பத்தி அனைத்தும் நவீன மயமாக்கப்பட்டதால் விசைத்தறி தொழிலில் ரக கட்டுப்பாட்டு சட்டத்தை அந்தந்த பகுதி கேட்ப மாற்றி அமைத்து விசைத்தறி தொழிலாளர் மீது ரக கட்டுப்பாட்டு சட்டத்தின் மூலம் வழக்குகள் இல்லாமல் பாதுகாக்க வேண்டும்.
நலிந்து வரும் விசைத்தறி தொழிலால் பாதிப்புக்கு உள்ளான சிறு குரு விசைத்தறி தொழிலாளர்கள் வங்கியில் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி கடந்த 60 ஆண்டு காலமாக தனி தொகுதியாகவே இருந்து வருகிறது இதனை கருத்தில் கொண்டு வரும் 2026 தேர்தலில் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியை பொதுத் தொகுதியாக அறிவித்து அனைத்து சமூகத்தினரும் சட்டமன்ற உறுப்பினராக பணி செய்ய வேண்டும்.
இவ்வாறு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்து செங்குந்தர் முன்னேற்ற சங்கத்தினர் மனு கொடுத்தனர்.